சென்னை: தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை, சாலைகளில் கொடிக்கம்பங்களை அமைப்பது குறித்து காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சாலைகளில் தற்காலிக கொடிக்கம்பங்களை நிறுவ அதிகபட்சமாக மூன்றுநாள்கள் அனுமதி வழங்கப்படவேண்டும் என்று அந்தத் துறை அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல நிபந்தனைகளையும் அரசாங்கம் விதித்துள்ளது. நிகழ்ச்சிக்கு ஏழு நாள்களுக்கு முன்பாகவே மாவட்ட ஆட்சிக் குழுவிடம் விண்ணப்பம் செய்யவேண்டும்.
கொடிக்கம்பங்களின் எண்ணிக்கை, பயன்படும் பொருள்கள், அமைக்கப்படும் இடம், கம்பங்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஆகியவற்றின் விவரங்களும் தெரிவிக்கப்படவேண்டும்.
சாலைகளின் கட்டமைப்புகள், நடைபாதை, வடிகால், பாலங்கள் போன்றவற்றில் கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி இல்லை. கொடிக்கம்பங்களின் உயரம் 3.50 மீட்டர் அளவுக்குள் இருக்கவேண்டும்.
மின்சாரம் தாக்காமல் கொடிக்கம்பத்தின் மேல்முனையை தடுப்புக் காப்புகளைக் கொண்டு மூடவேண்டும்.
அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால் ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று நாள் அவகாசம் முடிவடைந்த உடனே அவை ஏற்பாட்டாளர்களால் அகற்றப்படவேண்டும்.
கொடிக்கம்பங்களை வைப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு பல விதிமுறைகள் அரசாங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


