தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிறிஸ்துமஸ் கேக்கில் நஞ்சு கலப்பு; மூவர் உயிரிழப்பு

2 mins read
79470e3d-6828-40e8-922f-51a82f124666
நச்சுணவால் 2024 செப்டம்பர் மாதம் உயிரிழந்த ஒருவரின் உடலைத் தோண்டியெடுக்கவும் காவல்துறை அனுமதி கோரியுள்ளது. - மாதிரிப்படம்: ஊடகம்

ரியோ டி ஜெனிரோ: கிறிஸ்துமஸ் கேக்கைத் தின்றபின் பெண்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது.

அப்பெண்களில் ஒருவரின் இரத்தத்தில் ஆர்சனிக் கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் தின்ற கேக்கில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கலாம் என்று ஐயப்படுவதாகக் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்த கேக்கைச் செய்த பெண், பத்து வயதுச் சிறுவன் என மேலும் இருவரின் இரத்தத்தில் நச்சுமிக்க ஆர்சனிக் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவ்விருவரும் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிரேசிலின் தென்கடலோர நகரமான டோரஸ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கேக் தின்றபின் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

காவல்துறை அவர்கள் தின்ற கேக்கைப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. காலாவதியான பல்வேறு உணவுப்பொருள்களும் அப்பெண்ணின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கேக்கில் வேண்டுமென்றே நஞ்சு கலக்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இதனிடையே, கேக்கைச் செய்த பெண்ணின் கணவருடைய உடலைத் தோண்டி எடுக்க காவல்துறை அனுமதி கோரியுள்ளது. நச்சுணவு காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதம் அவர் மாண்டுபோனார். அப்போது, அவரது மரணம் இயற்கையிலேயே நிகழ்ந்ததாகக் காவல்துறை வகைப்படுத்தி இருந்தது.

இரு சம்பவங்களிலும் அப்பெண்மீது காவல்துறை ஐயப்படவில்லை. விசாரணை தொடர்கிறது.

கடந்த வாரம் திங்கட்கிழமை இடம்பெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட எழுவரில், கேக்கைச் செய்த பெண் உட்பட அறுவர் அதனைத் தின்றனர்.

கனிம உலோகமான ஆர்சனிக் நச்சுமிக்கது. அது மனிதர்களிடத்தில் புற்றுநோயை ஏற்படுத்தவல்லது.

மண்ணில் ஆர்சனிக் இருப்பதால் சிறிய அளவில் விளைபொருள்களில் அது காணப்படும். ஆயினும், அது மிகவும் குறைந்த அளவே என்பதால் அதனால் பாதிப்பில்லை.

சிலவகை மருந்துப் பொருள்களிலும் பூச்சிக்கொல்லிகளிலும் ஆர்சனிக் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்