ஈப்போ, பேராக்: மலேசியாவில் பேராக் மாநிலத்தின் ‘கம்பார்’ வட்டாரத்தில் உள்ள ஆறுகளில் அனைத்துப் பொழுதுப்போக்கு, வெளிப்புற நீர் விளையாட்டு நடவடிக்கைகளும் உடனடியாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோபெங்கில் உள்ள சுங்கை ஜாஹாங் பகுதியில் நீர் விளையாட்டின்போது நடந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அந்த அசம்பாவிதத்தில் மூவர் உயிரிழந்தனர்.
‘வாட்டர் ராஃப்டிங்’ (water rafting), ‘வாட்டர் டியூபிங்’ (water tubing) ஆகிய நீர் விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும் என்று மாவட்ட அதிகாரி நஸ்ருல் ஃபாமி முகம்மது கூறினார்.
சுங்கை ஜாஹாங்கில் நவம்பர் 15ஆம் தேதி ‘வாட்டர் ராஃப்டிங்’ நீர் விளையாட்டில் ஈடுபட்டபோது, மூன்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் உயிரிழந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவர்கள், திரு சுஹைலி மாட் சாட், 47, திரு முகம்மது கைருல் ஹக்கிம் ஹமிடி, 37, திரு முகம்மது இக்ராம் அப்துல் பாரி, 29, என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக, சுங்கை ஜாஹாங் ஆற்றின் நீர்நிலை திடீரென அதிகரித்ததால், அந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்தச் சம்பவத்தில், ஆறு பயணிகளையும் ஒரு வழிகாட்டியையும் ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்தது.

