ஜகார்த்தா: புகழ்பெற்ற இந்தோனீசிய சுற்றுலாத் தலமான பாலித் தீவில் பாலியல் காணொளிகளைத் தயாரித்து விநியோகித்ததாகக் கூறி, பிரெஞ்சு நாட்டினர் இருவரையும் இத்தாலியர் ஒருவரையும் அந்நாட்டுக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
பாலியல் காணொளிகள், உள்ளடக்கங்கள் மூலம் லாபம் ஈட்ட முயன்ற சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவரும் ஆடவர் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாலியின் பாடுங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஜோசப் எட்வர்ட் புர்பா செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாலியல் காணொளித் தயாரிப்புக் குற்றத்திற்காக அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலும், அவற்றை இணையத்தில் விநியோகித்ததற்காக மேலும் ஆறு ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனீசியாவில் பாலியல் சார்ந்த உள்ளடக்கங்களைத் தயாரிக்க கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலித் தீவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் அநாகரிகமான நடத்தைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர்.
2025ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பாலியல் பட நடிகை போனி புளூ என்பவர் பாலியிலிருந்து நாடுகடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவிய பாலியல் காணொளி ஒன்றின் அடிப்படையில் அண்மைச் சம்பவம் தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டதாகத் திரு ஜோசப் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 13ஆம் தேதி பாலியிலிருந்து தாய்லாந்து செல்ல முயன்ற ‘உள்ளடக்கத் தயாரிப்பாளரான’ பிரெஞ்சுப் பெண்ணையும் இத்தாலியரையும் குடிநுழைவு அதிகாரிகள் கைதுசெய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அப்பெண்ணின் ‘மேலாளர்’ எனக் குறிப்பிடப்படும் பிரெஞ்சு ஆடவர் சில நாள்களுக்குப் பிறகு பாடுங் பகுதியில் பிடிபட்டார்.

