மத்திய கிழக்கில் தாக்கப்பட்ட தாய்லாந்துக் கப்பலில் மூவர் சிக்கியுள்ளனர்

மத்திய கிழக்கில் தாக்கப்பட்ட தாய்லாந்துக் கப்பலில் மூவர் சிக்கியுள்ளனர்

2 mins read
1391a2bd-f656-4d16-ba53-b5cfd45eed15
அரச தாய்லாந்து கடற்படை வெளியிட்ட படம். ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்த அக்கப்பலை ஈரான் தாக்கியதில் அதிலிருந்து புகை கிளம்பும் காட்சி. - படம்: இபிஏ
multi-img1 of 2
Watch on YouTube

பேங்காக்: தாய்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட ‘மயூரி நாரி’ என்ற கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் புதன்கிழமை (மார்ச் 11) ஈரானால் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கப்பட்டது.

அந்தக் கப்பலில் இருந்த 20 சிப்பந்திகளை ஓமான் கடற்படையினர் அதே நாளில் மீட்டுள்ளனர் என்று அரச தாய்லாந்து கடற்படை கூறியது. ஆனால் இன்னும் மூன்று சிப்பந்திகள் கப்பலின் இயந்திர அறையில் சிக்கியிருப்பதாக கப்பலின் உரிமையாளர் திரு காலிட் ஹாஷிம் வியாழக்கிழமை (மார்ச் 12) தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் கப்பலையும் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கப்பலையும் எச்சரிக்கையை மீறி அந்த நீரிணையில் பயணம் செய்ததால் தாக்கியதாக ஈரான் புரட்சி காவல்படை புதன்கிழமையன்று அறிவித்தது.

தாய்லாந்துக் கப்பல், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் காலிஃபா துறைமுகத்திலிருந்து வளைகுடா கடலில் பயணம் செய்யும்போது தாக்குதலுக்கு உள்ளானது. அதன் இயந்திர அறை இரண்டு ஏவுகணைகளால் சேதமடைந்தது. அந்த மூன்று சிப்பந்திகளும் அந்த அறையில் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

“அவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் முயன்று வருகின்றனர். தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் அந்த மூவரை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை. கப்பலுக்குள் செல்ல நாங்கள் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறோம்,” என்று ‘பிரெஷியஸ் ஷிப்பிங்’ என்ற கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு காலிட் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சு 23 கப்பல் சிப்பந்திகளும் தாய்லாந்து நாட்டவர் என்பதை உறுதி செய்தது. தாய்லாந்தின் மற்ற கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை விட்டு சென்றுவிட்டதாக அமைச்சின் துணைப் பேச்சாளர் பனிடொல் பட்சிம்சவாட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காணமல்போன மூன்று சிப்பந்திகளைத் தேடும் பணி தொடரும் என்றும் வியாழக்கிழமை (மார்ச் 12) அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்