தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவீடனில் ரயில் தடம்புரண்டு மூவர் காயம்

2 mins read
aa93b2d5-baef-4ab6-bede-ba535086d080
கிழக்கு சுவீடனில் ரயில் தடம்புரண்டதில் மூவர் காயமடைந்தனர். - படம்: ஏஎஃப்பி

ஸ்டாக்ஹோம்: கிழக்கு சுவீடனில் ரயில் தடம்புரண்டதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

அங்கு பெய்து வரும் கனமழையால் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததையடுத்து இந்த விபத்து நடந்தது எனவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறை தெரிவித்தது.

மேலும், அந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்றும் காவல்துறை கூறியது.

கிட்டத்தட்ட 120 பேருடன் அந்த ரயில் சண்ட்ஸ்வால் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது எனவும் சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.00 மணிக்கு மேல் இந்த விபத்து நிகழ்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும் அவர்களின் காயத்தின் அளவு தெளிவாகத் தெரியவில்லை எனவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டது.

கனமழையால் ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதையும் காவல்துறை உறுதிசெய்தது.

சுவீடன் தேசிய வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை நாட்டின் பல இடங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்திருந்தது. வார இறுதியில் நாடு முழுவதும் மோசமான வானிலை நிலவும் என்பதால் பல பகுதிகளில் பெருங்காற்று, வெள்ளம், கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அது எச்சரித்திருந்தது.

மேலும், செவ்வாய், புதன்கிழமைகளில் ஏற்படும் வெள்ளத்தால் ‘சமூகத்திற்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும்’ என்பதால் தேசிய வானிலை ஆய்வு மையம் அந்த நாள்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் தெற்குப் பகுதிகளில் பெருமழை பெய்யலாம் என நார்வே வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை எச்சரித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்