தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெர்மானிய விழாவில் கத்திக்குத்து; மூவர் மரணம், பலர் காயம்

2 mins read
72a5afbb-a116-43ed-a7a3-8e5e4a31815a
தாக்குதல்காரர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் காவல்துறையினர் அவரை இன்னும் கைது செய்யவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாக ஜெர்மானிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. - படம்: இபிஏ

சோலிகன்: ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள சோலிகன் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதல் நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நடந்தது.

சோலிகன் நகரின் 650வது ஆண்டு விழாவைக் கொண்டாட மக்கள் கூடியபோது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

இத்தாக்குதலில் மூவர் மரணமடைந்தனர். காயமடைந்த எட்டு பேரில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜெர்மானிய நேரப்படி இரவு 9.40 மணி அளவில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் அங்கிருந்த பலரைக் கத்தியால் தாக்கியதாக ஜெர்மானியக் காவல்துறை கூறியது.

விழாவில் கலந்துகொண்டவர்களின் தொண்டைக்குத் தாக்குதல்காரர் குறிவைத்ததாகக் காவல்துறை கூறியது.

தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை என்றும் அதுதொடர்பாகக் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல்காரர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் காவல்துறையினர் அவரை இன்னும் கைது செய்யவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாக ஜெர்மானிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.

“தாக்குதல்காரரைப் பிடிக்க தங்களால் ஆன அனைத்தையும் ஜெர்மானிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது,” என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த வாரயிறுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாக்குதல் நடந்த பிறகு அவ்விடத்திலிருந்து கிளம்பிச் செல்லுமாறு நிகழ்ச்சி ஏற்பட்டாளர் அறிவித்ததாகவும் அதையடுத்து, ஆயிரக்கணக்கானோர் அமைதியான முறையில் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் அவ்விடம் வெறிச்சோடிக் கிடந்ததாக செய்தியாளர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்