குடிநுழைவுத் துறை லாரி மோதி மூவர் மரணம்; செயல்பாட்டு விதிமுறைகள் மறுஆய்வு

குடிநுழைவுத் துறை லாரி மோதி மூவர் மரணம்; செயல்பாட்டு விதிமுறைகள் மறுஆய்வு

2 mins read
b847520c-1e32-47b1-a3bd-a72ac79b7902
செயல்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக மறுஆய்வு செய்யப்படும் என்று மலேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார். - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மலேசியக் குடிநுழைவுத் துறை லாரி மோதியதில் பாதசாரிகள் மூவர் உயிரிழந்த விபத்தைத் தொடர்ந்து, துறையின் நடைமுறையிலுள்ள செயல்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக மறுஆய்வு செய்யப்படும் என்று மலேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து காவல்துறை மேற்கொண்டு வரும் விசாரணைக்குக் குடிநுழைவுத் துறை முழு ஒத்துழைப்பு நல்கும் என்றும் சட்ட அம்சங்கள் மட்டுமன்றி துறைசார்ந்த செயல்பாட்டு விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் துறை ரீதியான தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, கோலாலம்பூர் சுல்தான் இஸ்மாயில் சாலையில் உள்ள போக்குவரத்துச் சமிக்ஞை சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த குடிநுழைவுத் துறை லாரி ஒன்று, மோதியதில் தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

“சம்பவத்தன்று அதிகாலை 1 மணியளவில், அப்பகுதியில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, பிடிபட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அலுவலகத்திலிருந்து சௌ கிட் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி விபத்தில் சிக்கியது” எனக் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் தலைவரான உதவி ஆணையர் முகம்மது ஜம்ஸூரி முகம்மது ஈசா கூறினார்.

இதற்கிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழக்கக் காரணமான இந்த லாரி விபத்து குறித்து குடிநுழைவுத் துறை உடனடியாக முழுமையான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

கவனக்குறைவு அல்லது விதிமீறல் காரணமாக விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்தால் சம்பந்தபட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அவர் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகோலாலம்பூர்விபத்துலாரிகுடிநுழைவு