தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகள் பேருந்தில் இருந்தனர்

நார்வே பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு

2 mins read
30ace40a-3bce-4cb0-864e-3c3631e1c035
சாலையிலிருந்து விலகிச் சென்ற பேருந்து, ஆற்றில் விழுந்தது. - படம்: இபிஏ

ஓஸ்லோ: நார்வேயில் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகள் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமுற்றதாக உள்ளூர் காவல்துறை வியாழக்கிழமை (டிசம்பர் 26) தெரிவித்தது.

சாலையிலிருந்து விலகிச் சென்ற அப்பேருந்து, நார்வே பெருநிலத்திலிருந்து லோஃபோட்டன் தீவுக்கூட்டத்தைப் பிரிக்கும் ரஃப்சண்டேக்கு அருகே உள்ள ஏரியில் பகுதியளவு மூழ்கியது.

“பேருந்தில் இருந்தவர்கள் பலரும் வெளிநாட்டவர்கள்,” என்று கூறிய காவல்துறை, 58 பேர் இதனால் பாதிக்கப்பட்டதாகச் சொன்னது.

சீனா, பிரான்ஸ், இந்தியா, மலேசியா, ஹாலந்து, நார்வே, சிங்கப்பூர், தென் சூடான் ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பேருந்தில் இருந்தனர்.

‘நார்தன் லைட்ஸ்’ இயற்கை நிகழ்வைக் காண பிரபலமான சுற்றுலாத் தலமாக லோஃபோட்டன் தீவுக்கூட்டம் விளங்குகிறது.

பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளில் சிலர் உள்ளூர் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஹெலிகாப்டரில் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

“காயமுற்றோருக்கு சிகிச்சை அளிப்பதற்கும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணையைத் தொடங்குவதற்கும் இப்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று நார்ட்லேண்ட் காவல்துறைத் தலைவர் பென்ட் ஆர் எய்லெர்ட்சன் கூறியதை என்டிபி செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது.

பயணிகளின் முழுமையான பட்டியல் மற்றும் அவர்கள் எந்த நாட்டுக் குடிமக்கள் போன்ற தகவல்கள் இல்லாததால் அவர்களின் உறவினர்களைத் தொடர்புகொள்வது கடினமாக உள்ளது என்று அவர் கூறினார்.

உள்ளூர் அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்ததுடன் அந்தப் பகுதியில் நெருக்கடிநிலை குழுக்களை அமைத்துள்ளனர். மோசமான வானிலையால் மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டது என்றும் விபத்து நடந்த இடத்திற்கு ஹெலிகாப்டர் சென்றடைவதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் ஜோனஸ் காஸ்டர், “ஹாட்சலில் நிகழ்ந்துள்ள இந்த மோசமான பேருந்து விபத்து தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் துணை நிற்போம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்