குற்றக் கும்பலைச் சேர்ந்த மலேசியர் மூவர் மும்பையில் தடுத்துவைப்பு

1 mins read
816a2fc8-1813-48e2-82c2-91a1930b6940
தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரும் மும்பை விமான நிலையத்திலிருந்து மான்செஸ்டர் சென்றதாகவும் அங்கிருந்து மும்பைக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. - படம்: இணையம்

மும்பை: பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட மலேசியர் மூவர் மும்பை சத்ரபதி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அம்மூவரும் ‘கேங் கேப்டன் பிரபா’ என்ற குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

தேடப்பட்டு வருபவர்களாக அனைத்துலகக் காவல்துறை (இன்டர்போல்) அறிவித்தவர்களின் அடையாளங்களுடன் ஒத்துப்போனதால் 30களில் இருக்கும் அம்மூவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) மும்பையில் தடுத்துவைக்கப்பட்டனர்.

கொலை, தீவைப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, கிள்ளான், பாந்திங் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவர்கள் குற்றச்செயல்களை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.

தற்போது அவர்கள் மும்பை விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பிற்கு இடையே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மும்பையிலிருந்து மான்செஸ்டர் சென்றதாகவும் அங்குக் குடிநுழைவு அனுமதி மறுக்கப்பட்டு, மும்பைக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் ‘தி ஸ்டார்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பைக்குத் திரும்பிய அம்மூவரும் இந்தியாவிற்குள்ளும் நுழைய அனுமதிக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமையே மும்பைக்கு விரைந்த மலேசியக் காவல்துறை அதிகாரிகள் குழுவினர், அம்மூவரையும் நாடுகடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுகுறித்து மலேசிய-இந்திய அதிகாரிகள் பேசி வருகின்றனர் என்றும் தடையேதும் இல்லாவிடில் கூடிய விரைவில் அம்மூவரும் மலேசியாவிற்குத் திரும்ப அழைத்துவரப்படுவர் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்