கோலாலம்பூர்: இஸ்ரேலுக்கு அனுப்பப்படவிருந்த மேலும் பல சரக்குத் தொகுதிகளை மலேசியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றில் அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு வலுவாக உள்ள மலேசியாவில், இது சரக்குகள் மீதான சோதனையில் ஒரு புதிய தீவிரத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
டெல் அவிவ் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள அஷ்டோத் (Ashdod) துறைமுகத்திற்கு அனுப்பப்படவிருந்த மூன்று கொள்கலன்கள், ஆகஸ்ட் மாத மத்தியில் மலேசியாவின் தஞ்சோங் பெலபாஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டன.
அக்கொள்கலன்களில் உள்ள பொருள்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால், அவை இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று இத்தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர். பொதுவெளியில் பேச அதிகாரபூர்வ அனுமதி இல்லாததால், அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 7ஆம் தேதி, மற்றொரு கொள்கலன் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. பிலிப்பீன்சிலிருந்து வந்த அக்கொள்கலன், இஸ்ரேலியப் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான ‘எல்பிட் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்திற்கு அனுப்பப்படவிருந்ததால், அதில் ஆயுதங்கள் இருக்கலாம் என்று மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பு சந்தேகித்தது.
மற்ற மூன்று பறிமுதல்களும் ஆகஸ்ட் 19ஆம் தேதி நடந்ததாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
புளூம்பெர்க் நியூஸ் பார்வையிட்ட சரக்கு விவரப் பட்டியல்களின்படி, அந்தக் கொள்கலன்களில், ‘சோங்சிங் மொபிமேக்ஸ் டெக்னாலஜி’ என்ற சீன உற்பத்தியாளரிடமிருந்து அனுப்பப்பட்ட மின்சைக்கிள் பாகங்கள் இருந்தன.
ஆகஸ்ட் 7ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பறிமுதல் நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், “இஸ்ரேலிய ஆட்சியின் கொடூரமான செயல்களுக்கு ஆதரவளிக்கும் அல்லது பங்களிக்கும் வகையிலான வர்த்தகப் பரிமாற்றங்களுக்குத் தனது நாடு ஒரு வழித்தடமாக இருக்காது,” என்று கூறினார்.
இஸ்ரேலுடன் தூதரக அல்லது வர்த்தக உறவுகளை மலேசியா கொண்டிருக்கவில்லை.
திரு அன்வாரின் அலுவலகப் பிரதிநிதிகள், இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர்.
இவ்விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அதனால் இது குறித்து கூடுதல் கருத்து எதையும் தெரிவிக்க இயலாது என்றும் மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
