ராவல்பிண்டியில் மூன்று நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டிகள்

1 mins read
குண்டுவெடிப்புக்குப் பின்னரும் ஏற்று நடத்தும் பாகிஸ்தான்
23c4d597-95fe-4da8-97e9-99ce1b35554c
பாகிஸ்தான் பாதுகாப்புச் சோதனைச் சாவடி ஒன்றில் நவம்பர் 12ஆம் தேதி, மோட்டார்சைக்கிளோட்டிகளின் பைகளைச் சோதனையிடும் காவல்துறை அதிகாரி. - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நவம்பர் 18ஆம் தேதி முதல் மூன்று நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வியாழக்கிழமை (நவம்பர் 13) இதனைத் தெரிவித்தது.

அண்மையில் இஸ்லாமாபாத்தில் தற்கொலைத் தாக்குதல் நடைபெற்ற நிலையில் இப்போட்டிகளைப் பாகிஸ்தான் ஏற்று நடத்துகிறது. பாகிஸ்தான், இலங்கை, ஸிம்பாப்வே ஆகியவை இதில் பங்கேற்கின்றன.

இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ளும் முக்கிய வாய்ப்பாக இது கருதப்படுகிறது.

முன்னதாக, இத்தொடரின் ஐந்து போட்டிகள் லாகூரில் நடைபெறும் என்றும் பாகிஸ்தானும் இலங்கையும் பொருதும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகள் இரண்டு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராவல்பிண்டியில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது அனைத்துப் போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஸிம்பாப்வே கிரிக்கெட் வாரியங்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.

கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12 பேர் மாண்டதைத் தொடர்ந்து இலங்கை அணியின் விளையாட்டாளர்கள் சிலர் தாயகம் திரும்பக் கோரிக்கை விடுத்திருந்தனர். பாதுகாப்புக் காரணங்களை அவர்கள் சுட்டினர். ஆனால் இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அவர்கள் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ராவல்பிண்டி நகரம் இஸ்லாமாபாத்திலிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்