பெட்டாலிங் ஜெயா: ஜாலான் சுல்தான் இஸ்மாயில் - மாஜு சந்திப்பில் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மலேசியக் குடிநுழைவுத் துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மலேசியக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் இதனைத் தெரிவித்தார்.
காவல்துறை, குடிநுழைவுத் துறையின் விசாரணைகள் முடியும் வரை இந்தப் பணியிடைநீக்க நடவடிக்கை நடப்பில் இருக்கும் என்றார் அவர்.
சம்பவத்தில், போக்குவரத்துச் சிவப்புச் சமிக்ஞை விளக்கு எரிந்தபோதும், அபாய அறிவிப்பு (சைரன்) ஒலியுடன் வந்த குடிநுழைவுத் துறை லாரியின்மீது ‘புரோட்டான் சாகா’ கார் ஒன்று மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, பின்னர் நடந்து சென்றுகொண்டிருந்த குடும்பத்தினர்மீது மோதியதாகத் தெரிகிறது.
இந்த விபத்தில் 53 வயது ஆடவரும், முறையே 25, 12 வயதான அவரது இரு மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த, ஆடவரின் 55 வயது மனைவி கோலாலம்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவத்தின்போது அந்த லாரி சட்டவிரோதக் குடியேறிகளைக் கைது செய்யும் நடவடிக்கைக்காகச் சௌ கிட் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தது. அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் பிளாக் மரியா லாரி, புரோட்டான் சாகா கார் என இரு வாகனங்களின் ஓட்டுநர்களையும் காவல்துறை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்துகிறது.


