அமெரிக்கத் துப்பாக்கிச்சூட்டில் மூவர் மரணம், 10 பேர் காயம்

2 mins read
6a7e8913-3132-483e-951f-40c5145ed2e2
அர்கன்சாஸ் மாநிலத்தின் ஃபோர்டிஸ் நகரில் உள்ள ‘மேட் புட்சர்’ கடையில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லிட்டில் ராக்: அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலத்தில் பேரங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது.

மேலும், 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் என்று மாநிலக் காவல்துறை குறிப்பிட்டது.

இச்சம்பவம் லிட்டில் ராக்குக்குத் தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபோர்டிஸ் நகரின் ‘மேட் புட்சர்’ கடையில் நடந்தது.

ஜூன் 21ஆம் தேதி அந்தப் பேரங்காடியில் ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் அந்த ஆடவருக்கும் காயம் ஏற்பட்டதாக அர்கன்சாஸ் மாநிலக் காவல்துறை இயக்குநர் மைக் ஹகார் செய்தியாளர்களிடம் கூறினார்.

“துரதிர்ஷ்டவசமாக, அப்பாவிப் பொதுமக்கள் 11 பேர் சுடப்பட்டதை உறுதிசெய்கிறோம். அவர்களில் மூவர் மாண்டுவிட்டனர். காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் சட்ட அமலாக்க அதிகாரிகள் இருவரும் காயமடைந்துள்ளனர். சந்தேக நபரை அதிகாரிகள் சுட்டு, கட்டுக்குள் கொண்டுவந்தனர்,” என்றார் திரு ஹகார்.

துப்பாக்கிச்சூடு நடந்த சூழல் குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

காயமடைந்த அதிகாரிகளும் சந்தேக நபரும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்த பொதுமக்களில் சிலருக்கு மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

சம்பவம் குறித்துத் தமக்கு விளக்கிக் கூறப்பட்டதாக மாநில ஆளுநர் சாரா ஹக்கபீ சாண்டர்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“சட்ட அமலாக்கத் துறைக்கும் சம்பவத்தில் உதவிக்கரம் நீட்டியவர்களுக்கும், உயிர்களைக் காப்பாற்ற அவர்கள் விரைந்து மேற்கொண்ட சாகச நடவடிக்கைகளுக்கு மிகவும் நன்றி. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது வேண்டுதல்கள்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்