சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் மூவர் காயம்

சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் மூவர் காயம்

1 mins read
51d60486-9eaf-493a-a902-92f0b49c2c33
சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்கு அந்த பேருந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. - படம்: ஜசின் வட்டாரக் காவல்துறை
Google News Preferred Icon

ஜசின்/மலாக்கா: சிங்கப்பூரிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 12 பயணிகளுடன் அந்நாட்டின் வடக்கு-தெற்குவிரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, மலாக்கா அருகில் ஜசின் என்ற இடத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) அதிகாலை 5 மணியளவில் கவிழ்ந்தது.

ஓர் 62 வயது சிங்கப்பூரர் உட்பட மூவர் அவ்விபத்தில் காயமடைந்தனர். சாலையில் இருந்து விலகி அந்தப் பேருந்து திசைமாறி பிறகு ஒருபக்கமாகச் சாய்ந்துக் கவிழ்ந்தது.

விபத்தில் 59 வயது மலேசிய சுற்றுலா வழிகாட்டியும், 42 வயது பிரிட்டன் நாட்டவரும் காயமடைந்தனர் என்று மலேசியாவின் பெர்னாமா ஊடகம் தெரிவித்தது.

பேருந்து வடக்கு தெற்கு விரைவுச் சாலையின் 177.6 கிலோமீட்டர் தூரத்தை அடைந்த இடத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்துக்கு முன் சென்ற ஒரு லாரியின் வேகம் மெதுவடைந்தபோது அதன்மீது மோதுவதைத் தவிர்க்கப் பேருந்து ஓட்டுநர் சாலை வழித்தடத்தைக் கடந்து பக்கவாட்டில் சென்றார். அதனால் பேருந்து கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது என்று ஜசின் வட்டாரக் காவல்துறைத் தலைவர் லீ ராபர்ட் விளக்கமளித்தார்.

பேருந்து ஓட்டுநருக்கும் எஞ்சிய எட்டுப் பயணிகளுக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று திரு லீ உறுதிப்படுத்தினார்.

‘த வைப்ஸ்’ ஊடகத்தின்படி காயமடைந்த ஆடவரான மலேசிய சுற்றலா வழிகாட்டிக்கு காலில் காயம் எற்பட்டுள்ளது. மற்ற இருவரும் பெண்கள் எனவும் அவர்களுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

அவர்கள் மூவரும் ஜசின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகோலாலம்பூர்மலாக்காபேருந்துவிபத்துகாயம்முதியோர்காவல்துறை