சியம் ரியப்: கம்போடியாவிலுள்ள உலகின் ஆகப் பெரிய இந்துக் கோவிலான அங்கோர் வாட் கோவில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) மின்னல் தாக்கி மூவர் இறந்துவிட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தோரில் நான்கு வயதுக் குழந்தையும் அடங்கும்.
மாலை 5 மணியளவில் நேர்ந்த இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பலரும் கம்போடியர்கள்.
மழை பெய்தபோதும் அங்கு ஆன்மிக மரபுச் சடங்கு நடந்ததாகவும் அதற்காகக் கம்போடியர்கள் பலர் கோவிலின் மேற்பகுதியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
விபத்து தொடர்பில் இன்னும் அதிகாரத்துவ அறிக்கை வெளியாகவில்லை.
கோவில் வளாகத்தில் மின்னல் பாதுகாப்பு அமைப்பு இல்லாதது அல்லது போதிய அளவில் இல்லாததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அங்கோர் வாட்டில் மின்னல் தாக்கி உயிருடற்சேதம் ஏற்பட்ட செய்தியை அகற்ற வேண்டும் என்று கம்போடியர்கள் பலர் சமூக ஊடகங்கள் வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அது கம்போடியாவின் பெயருக்குக் களங்கம் விளைவித்து, சுற்றுப்பயணிகளின் வருகையைக் குறைத்துவிடும் என்று அவர்கள் அஞ்சுவதே அதற்குக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
கம்போடியாவில், இவ்வாண்டில் மட்டும் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கி பலியானதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்போடியா இடி, மின்னலால் அடிக்கடி பாதிக்கப்படும் வட்டாரமாகக் கருதப்படுகிறது.