புதுடெல்லி: பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தெற்காசியாவில் முக்கால்வாசிக் குழந்தைகள் ஆபத்தான அளவில் உயர் வெப்பநிலையை எதிர்நோக்குகின்றன.
உலகளவில் பதிவாகியுள்ள ஆக அதிகமான வெப்பநிலை அது. ஏறக்குறைய 460 மில்லியன் குழந்தைகள் அல்லது 76 விழுக்காட்டுக் குழந்தைகள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் எச்சரித்தது.
ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள குழந்தைகள் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மிகக் கடுமையான அபாயத்தில் இருப்பதாக யூனிசெஃப் எச்சரித்தது.
ஓராண்டில் 35 டிகிரி செல்சியசுக்கும் மேல் பதிவான 83 நாள்கள் அல்லது அதற்கும் மேல் உள்ளதாக யூனிசெஃப் கூறியது. வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்ப குழந்தைகள் உடனடியாகத் தங்களைப் பழக்கிக்கொள்ள முடியாது. அவர்களால் தங்களின் உடலில் இருந்து அளவுக்கு அதிகமான வெப்பத்தை வெளியேற்றவும் முடியாது.
“இளம் குழந்தைகளால் வெப்பத்தைச் சமாளிக்க முடியாது. நாம் இப்போதே நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தக் குழந்தைகள் வரும் ஆண்டுகளில் மேலும் அடிக்கடிவரும் கடுமையான வெப்ப அலைகளின் தாக்கத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும்”, என்று தெற்காசியாவுக்கான யூனிசெஃப் வட்டார இயக்குநர் சஞ்சய் விஜேசேகரா கூறினார்.
உலகளவில் இதுவரை இல்லாத அளவில் ஆக வெப்பம் மிகுந்த மாதமாக ஜூலை பதிவானது. உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையுடன் கூடிய கடும் வெப்பம் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் மில்லியன்கணக்கானோரைப் பாதித்துள்ளது.

