பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பாகாங் மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் புலி ஒன்று இறந்துகிடக்கக் காணப்பட்டது. அவ்வழியாகச் சென்ற கார் ஒன்று மோதியதில் அந்தப் புலி மடிந்ததாக நம்பப்படுகிறது.
மலேசிய விலங்கு சங்கத்தின்படி, அந்த மலாயன் புலிக்கு ஐந்து வயதாக இருக்கும் என கணிக்கப்பட்டது.
வியாழக்கிழமை (மே 16) அதிகாலை 1.20 மணியளவில் விரைவுச்சாலையைக் கடந்தபோது அந்தப் புலி வாகனத்தால் மோதப்பட்டது என நம்பப்படுவதாக பாகாங் வனவிலங்கு, தேசிய பூங்காத் துறை இயக்குநர் ரோஸிடான் முகம்மது யாசின் கூறினார்.
“பெந்தோங்கில் உள்ள புக்கிட் திங்கி காட்டுப்பகுதியில் இருந்து அந்தப் புலி வந்ததாக நம்பப்படுகிறது. அதன் எடை ஏறக்குறைய 130 கிலோகிராம்,” என்று அவர் தெரிவித்தார்.
அண்மையில் நடந்த மலாயன் புலிகள் சம்பந்தப்பட்ட மூன்றாவது வாகன விபத்து இதுவாகும். அருகிவரும் இனத்தைச் சேர்ந்த மலாயன் புலிகளின் எண்ணிக்கை, வனப்பகுதிகளில் 200க்கும் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

