பெட்டாலிங் ஜெயா: மலேசியா முழுவதும் உள்ள கடைத்தொகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தலைமை அதிகாரி (ஐஜி) ரஸாருதீன் ஹுஸைன் தெரிவித்து உள்ளார்.
சிலாங்கூர் மாநிலம், ஷா ஆலாம் நகரின் சேத்தியா ஆலமில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடைத்தொகுதிகளில் பணிபுரியும் துணைக் காவல்படை[Ϟ]யினர் மற்றும் பாதுகாவலர்கள் தொடர்ந்து விழிப்புநிலையில் இருக்குமாறு திரு ரஸாருதீன் உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரை சிலாங்கூர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறிய அவர், அந்த நபரைத் தேடும் பணியில் பல்வேறு காவல்துறை பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினரும் நாட்டின் எல்லையில் உள்ள அதிகாரிகளும் சந்தேக நபரைக் கண்டறிவதில் விழிப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக திரு ரஸாருதீன் கூறினார்.
“துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் பற்றிய பொதுமக்களின் கவலை புரிகிறது. இருப்பினும், அந்தச் சம்பவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவது தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும்,” என்று மலேசிய ஊடகம் ஒன்றிடம் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சந்தேக நபர் குறித்த விவரங்களை சிலாங்கூர் காவல்துறை தலைமை அதிகாரி ஹுசைன் ஓமர் கான் வெளியிட்டார்.
அந்த மலேசிய ஆடவர் 30களில் உள்ளவர் என்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட 11 வழக்குகள் அவர் மீது உள்ளன என்றும் திரு ஹுசைன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.
கடைத்தொகுதியின் துப்புரவாளரை நோக்கி சந்தேக நபர் நான்கு முறை சுட்டார். அப்போது அந்தத் துப்புரவாளரின் காலிலும் பின்புறத்திலும் காயங்கள் ஏற்பட்டன.
சுட்ட பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பிய ஆடவர், கடைக்கு வந்திருந்த ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி, வேறு இடத்திற்குத் தம்மை வேகமாக காரில் கொண்டுசென்று விடுமாறு கட்டாயப்படுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.