வாஷிங்டன்: அமெரிக்காவில், டிக்டாக் செயலியைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் உடன்பாடு ஒன்றைச் செய்துள்ளதாகப் பைட்டான்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை (ஜனவரி 22) அறிவித்துள்ளது.
நீண்டகாலமாக டிக்டாக் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இழுபறி உடன்பாடு ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
அமெரிக்க நிறுவனத்திடம் டிக்டாக் செயலி ஒப்படைக்கப்படாவிட்டால் அமெரிக்காவில் அந்தச் செயலி தடைசெய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு எச்சரித்திருந்தார்.
அதன் அடிப்படையில் டிக்டாக்கும் அதை நிர்வகிக்கும் பைட்டான்ஸ் நிறுவனமும் அமெரிக்காவில் உள்ள அவற்றின் செயல்பாடுகளை, ஓரக்கல் எனும் அமெரிக்க முதலீட்டாளர்கள் நிறுவனத்துக்கும் சில்வர் லேக் என்ற தனியார் பங்கு நிறுவனத்துக்கும் மாற்றிவிட ஒப்பந்தம் செய்துகொண்டன.
அதன்மூலம் மில்லியன்கணக்கான அமெரிக்கர்கள் டிக்டாக் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
புதிய உடன்பாட்டின்கீழ் டிக்டாக் யுஎஸ்டிஎஸ் ஜாயிண்ட் வென்சர் எல்எல்சி (TikTok USDS Joint Venture LLC) என்ற நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. தரவுகளை ரகசியமாகப் பாதுகாப்பதன் மூலமும் இணையப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மூலமும் அமெரிக்கப் பயனீட்டாளர்களின் தரவுகள் பாதுகாக்கப்படும்.
டிக்டாக் செயலியைக் காப்பாற்றுவதற்கு உதவிசெய்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இதற்கிடையே, டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியூ ஷாவ் சி, டிக்டாக்கைப் பயன்படுத்தும் அனைத்துலகப் பயனீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) காணொளி வழி தமது நன்றியைத் தெரிவித்த திரு சியூ, அனைத்துலக அளவில் டிக்டாக்கைப் பயன்படுத்தும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோருக்கு நன்றி சொன்னதுடன் புத்தாக்கத்தையும் ஆர்வத்தையும் செயலி மூலம் பகிர்ந்துகொள்ளும் 200 மில்லியன் அமெரிக்கர்களை மெச்சினார்.
“டிக்டாக் சமூகத்துக்கு நன்றி. இன்னும் சிறந்த முறையில் உங்கள் திறனைச் செயலி மூலம் வெளிப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்,” என்றார் சிங்கப்பூரரான திரு சியூ.

