வாஷிங்டன்: 'டிக்டாக்' சமூக ஊடகம் அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை என்று அதன் தலைமை நிர்வாகி ஷாவ் ஸி சியூ தெரிவித்து இருக்கிறார்.
அண்மைய ஆண்டுகளாக டிக்டாக் செயலி உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'பைட் டான்ஸ்' எனும் சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அச்செயலி அமெரிக்கர்களை உளவு பார்ப்பதாகவும் அமெரிக்காவைப் பற்றிய தகவல்களை சீன அரசுக்கு வழங்கிவருவதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது.
இதனையடுத்து, அமெரிக்க அரசுப் பணிகளில் இருப்போர் அச்செயலியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், அது மட்டும் போதாது, அமெரிக்கா முழுமைக்கும் அச்செயலிக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றக் குழுமுன் நேற்று முன்னிலையாகி, டிக்டாக் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை எனக் கூறி, விளக்கமளித்தார் திரு ஷாவ் ஸி சியூ.
"சீனாவிற்காகவோ வேறு நாடுகளுக்காகவோ டிக்டாக் வேலை செய்யவில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். 150 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் டிக்டாக்கை விரும்புகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்," என்று திரு ஷாவ் கூறினார்.
சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயலி என்றபோதும் டிக்டாக் உலகளாவிய நிறுவனம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரிலும் லாஸ் ஏஞ்சலிசிலும் டிக்டாக்கின் தலைமையகங்கள் செயல்படுவதாகக் கூறிய அவர், டிக்டாக் உளவு பார்க்கிறது என்று கூறுவது முற்றிலும் கற்பனையானது என்றும் சொன்னார்.
ஆப்கானிஸ்தான், பெல்ஜியம், கனடா, டென்மார்க், இந்தியா, நியூசிலாந்து, நார்வே, பாகிஸ்தான், தைவான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் டிக்டாக்கிற்குப் பகுதி அளவு அல்லது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

