ஆசியான் அமைப்பு, 26 ஆண்டுகளில் முதன்முறையாக மேலும் விரிவு காணவுள்ளது. குழுமத்தின் 11வது உறுப்பினராக திமோர்-லெஸ்டே, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) சேர்க்கப்பட்டுள்ளது.
47வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் வட்டாரத் தலைவர்கள் ஒன்றுகூடிய சமயத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மலேசியாவின் தலைமையில் இந்த உச்சநிலைக்கூட்டம், கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் திமோர்-லெஸ்டேயின் இணைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மாறிவரும் தற்போதைய புவிசார் அரசியல் சூழலுக்கும் உலக உறுதியின்மைக்கும் இடையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.
1.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள திமோர்-லெஸ்டே, 2002ல் சுதந்திரம் பெற்றது. அது முதன்முதலாக 2011ல் ஆசியான் உறுப்பியத்திற்குப் பதிவு செய்தது.
இதனை உறுதிசெய்யும் கையொப்ப நிகழ்ச்சிக்காக திமோர்-லெஸ்டேயின் பிரதமர் ஸனானா குஸ்மாவோ, மற்ற 10 ஆசியான் தலைவர்களுடன் ஒன்றிணைந்தார்.
1999ல் கம்போடியா, ஆசியான் அமைப்பில் இணைந்ததற்குப் பிறகு இந்தக் குழுமத்தில் இணைந்துள்ள முதல் நாடாக திமோர்-லெஸ்டே திகழ்கிறது.
தொடர்புடைய செய்திகள்
1967ல் ஐந்து உறுப்பு நாடுகளுடன் தொடங்கிய ஆசியான், தற்போது 700 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைப் பிரதிநிதிக்கிறது.
2011ல் முதன்முதலாக உறுப்பினராகச் சேர விண்ணப்பித்த திமோர்-லெஸ்டேக்கு 2022ல் பொதுவான ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, ஆசியானின் அரசியல், பொருளியல் மற்றும் நிர்வாகத் தரநிலையை எட்டுவதற்கு அந்நாடு, பல ஆண்டுகளாக ஆற்றலைப் பெருக்கவும் நிர்வாகத்தை வலிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வந்தது.
வெளிப்படைத்தன்மையிலும் வட்டார ஒருமைப்பாட்டிலும் ஆசியான் கொண்டுள்ள கடப்பாட்டை இந்த விரிவாக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இணைவதில் அடக்கம், பெருமிதம்
திமோர்-லெஸ்டேக்கு வாழ்த்து தெரிவித்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், அதன் இணைப்பு ஆசியான் குடும்பத்தை நிறைவு செய்துள்ளதாகக் கூறினார்.
இந்தச் சமூகத்தில், திமோர்-லெஸ்டேயின் மேம்பாட்டுக்கும் அதன் உத்திபூர்வ தன்னாட்சிக்கும் உறுதியான, நீடித்த ஆதரவு இருக்கும் என்று திரு அன்வார் கூறினார்.
ஆசியானுடன் இணைந்தது, திமோர்-லெஸ்டே மக்களின் மீள்திறனுக்கும் ஜனநாயகத்தின்மீது அது கொண்டுள்ள கடப்பாட்டுக்கும் சான்றாக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் குஸ்மாவோ தெரிவித்தார்.
“அடக்கத்துடனும் பெருமையுடனும் திமோர்-லெஸ்டே ஆசியான் அமைப்பில் சேர்கிறது. ஆசியானின் மூலப் பண்புகளான இருதரப்பு மரியாதை, அமைதியுடன் கூடிய ஒத்துழைப்பு, பன்முகத்தன்மையில் ஒற்றுமை, வட்டார ஒருமைப்பாடு ஆகியவற்றை திமோர்-லெஸ்டே முழுமையாகத் தழுவுகிறது,” என்று அவர் கூறினார்.
திமோர்-லெஸ்டே ஆசியானில் இணைக்கப்பட்டது குறித்து கருத்துரைத்த வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “பல்வேறு அமைப்புகளை வலுப்படுத்தவும் ஆற்றலை வளர்க்கவும், ஆசியானில் சேர திமோர்-லெஸ்டேயின் முயற்சிகளை சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டம் மற்றும் ஆசியான் ஒருங்கிணைப்புக்கான முயற்சி மூலம், பொது நிர்வாகம், கல்வி, மின்னிலக்க நிர்வாகம் போன்ற துறைகளில் நூற்றுக்கணக்கான திமோர்-லெஸ்டே அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் பயிற்சி அளித்துள்ளது.
“திமோர்-லெஸ்டே அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சிங்கப்பூரின் வாழ்த்துகள். இது ஆசியானின் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கு பெருமை சேர்க்கும் நம்பிக்கையூட்டும் தருணம்,” என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
திமோர்-லெஸ்டே ஆசியானில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்ட தருணத்தைப் பார்த்த அந்நாட்டு அதிகாரியான திருமதி பிரான்சிஸ்கா மையா கண்ணீர் விட்டு அழுதார்.
“ஒரு திமோரியராக, இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவருடன், கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் உள்ள ஊடக நிலையத்தில், அந்நாட்டின் நிருபர்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தபோது, மற்ற ஆசியான் உறுப்பு நாடுகளின் கொடிகளுடன் சேர்ந்து திமோர்-லெஸ்டே கொடியும் அதிகாரபூர்வமாக ஏற்றப்பட்டது.

