தோக்கியோ: அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து பாலர் பள்ளிக் குழந்தைகளுக்கான பகல் நேரப் பராமரிப்பை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தோக்கியோ நகர ஆளுநர் அறிவித்துள்ளார்.
ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், அதனை உயர்த்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் இடம்பெறவுள்ளது.
அதன்படி, ஜப்பானியக் குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், இரண்டாவது குழந்தைக்கும் அதன்பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கும் பகல் நேரப் பராமரிப்பு இலவசமாக வழங்கப்படும்.
வளர்ந்த நாடுகள் பலவற்றில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், ஜப்பானில் அது மோசமான அளவில் இருக்கிறது.
“ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்குத் தீர்வுகாண விரைந்து செயல்பட வேண்டியுள்ளது,” என்று தோக்கியோ ஆளுநர் யூரிக்கோ கொய்க்கே தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், ஜப்பானில் முதன்முறையாக, 14 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள தோக்கியோவில் பகல் நேரக் குழந்தைப் பராமரிப்புச் சேவை இலவசமாக வழங்கப்படவுள்ளது.
ஜப்பானில் தற்போது வேலைசெய்யும் தம்பதியரின் குழந்தைகளுக்குப் பகல்நேரப் பராமரிப்புச் சேவை வழங்கப்படுகிறது. அதனை அனைத்துக் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக, அரசு ஊழியர்களுக்கு வாரம் நான்கு நாள்கள் வேலைத் தெரிவை அறிமுகப்படுத்த விரும்புவதாகத் திருவாட்டி கொய்க்கே அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

