தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவின் ரயில் கட்டமைப்பில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) காலை ஏற்பட்ட மின்சாரக் கோளாற்றால் இரண்டு முக்கிய ரயில் பாதைகளில் சேவைத் தடங்கல் ஏற்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட தீயே மின்சாரக் கோளாற்றுக்குக் காரணம் என்று அறியப்படுகிறது.
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் உள்ள யமனொடே, கெய்ஹின்-டொஹொக்கு ஆகிய பாதைகளின் ரயில் சேவைகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டதாக ஜப்பானிய ரயில்வே சொன்னது.
டாமாச்சி ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்துக்கு அருகே தீ மூண்டதால் இரண்டு ரயில் பாதைகளின் சேவைகளும் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிவாக்கில் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே கூறியது.
தண்டவாளத்திற்கு அருகில் உள்ள மின்மாற்றிக் கருவியிலிருந்து (transformer) தீப்பொறி வந்ததாகவும் தீ அரை மணி நேரத்துக்குள் அணைக்கப்பட்டுவிட்டதாகவும் என்ஹெச்கே குறிப்பிட்டது.
இரு நிலையங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட கெய்ஹின்-டொஹொக்கு ரயிலிலிருந்து இறங்கிய பயணிகள் தண்டவாளத்தில் நடந்து நிலையத்திலிருந்து வெளியேறினர்.
பாதிக்கப்பட்ட யமனொடே பாதை ஷின்ஜுக்கு நிலையத்தைக் கடந்து செல்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 3.5 மில்லியன் பயணிகள் அந்த நிலையத்தைக் கடக்கின்றனர்.
கெய்ஹின்-டொஹொக்கு பாதை தோக்கியோ, யோக்கோஹாமா ஆகிய நிலையங்களைக் கடந்துசெல்கிறது.
பரபரப்பான ரயில் சேவைகள் நிலைக்குத்தியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

