ஜெருசலம்: ஹமாஸ் போராளிகள் குழுவின் ஆயுத தயாரிப்புத் தளபதியைக் காஸாவில் கொலை செய்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அண்மையில், காஸாவின் தெற்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த இஸ்ரேலிய ராணுவத்தைக் குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதில் இரண்டு இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர்.
அதற்குப் பதிலடிகொடுக்கும் விதமாகத் தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ராத் சாத் என்னும் அந்த நபரைக் கொல்ல இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்சும் அனுமதி வழங்கியதாக அறிக்கைமூலம் இஸ்ரேலிய அரசாங்கம் சனிக்கிழமை (டிசம்பர் 13) தகவல் வெளியிட்டது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தினர். அதற்குத் திட்டம் தீட்டிய நபர்களில் ராத் சாத்தும் ஒருவர் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ராத் சாத் மரணம் குறித்து ஹமாஸ் தகவல் ஏதும் வெளியிடவில்லை. சண்டை நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் மீறுவதாக அது கூறியது.
இந்நிலையில், காஸா நகரின் மேற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நால்வர் மாண்டனர், மூவருக்குக் காயம் ஏற்பட்டது. அதை ‘ஏபி’ செய்தி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. இருப்பினும், இஸ்ரேல் காஸாவில் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு மட்டும் 380க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

