இந்தியாவில் 3 பெரிய தாக்குதல்களுக்குத் திட்டமிட்ட பயங்கரவாதி கொலை

1 mins read
4bdaa46c-4e58-4c95-a792-2092040fc616
சைஃபுல்லா காலித் என்கிற கசூரி பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அடையாளம் தெரியாத விரோதிகளால் அவர் தாக்கப்பட்டதாக இந்தியா டுடே தொலைக்காட்சி கூறியது. - படம்: ஊடகம்

கராச்சி: இந்தியாவில் மூன்று பெரிய தாக்குதல்களின் பின்னணியில் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் தளபதிகளில் ஒருவரான சைஃபுல்லா காலித் என்கிற கசூரி கொல்லப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், அடையாளம் தெரியாத விரோதிகளால் அவர் தாக்கப்பட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்தது என்று இந்தியா டுடே தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை (மே 18) தெரிவித்தது.

இந்தியாவில் ஆறு ஆண்டுகளில் மூன்று பெரிய தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

2001ஆம் ஆண்டு ராம்பூரில் இருந்த ராணுவ முகாம், 2005ல் பெங்களூரில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாடு, 2006ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகம் ஆகியவற்றின் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

அந்த மூன்று தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவர் சைஃபுல்லா காலித் என ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத் தலைவராக அவர் இருந்தார்.

ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியாவின் பஹல்காமில் 26 சுற்றுப்பயணிகள் கொல்லப்பட்ட சம்பத்திலும் அவருக்குத் தொடர்பு இருந்ததாக சில தகவல்கள் கூறின.

சில காலத்திற்கு முன், நேப்பாளத்தில் வினோத் குமார் என்ற பெயரில் அவர் இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்