ஹேமானா (துருக்கி): லிபியாவின் ஆயுதப் படைத் தலைவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
அவருடன் உயரிய பொறுப்பில் இருக்கும் இதர நான்கு ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் இருந்த தனியார் விமானம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) துருக்கியத் தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியதில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்கள் இருந்த ஃபால்கன் 50 ரக விமானத்தின் சிதைவுகளை துருக்கிய பாதுகாப்பு அதிகாரிகள், அங்காராவுக்கு அருகே உள்ள ஹேமானா மாவட்டத்தில் கண்டெடுத்தனர். விமானத்தில் இருந்த மூன்று விமான ஊழியர்களும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர். துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிக்காயா இத்தகவல்களை வெளியிட்டார்.
லிபியா பிரதமர் அப்துலாமித் தெய்பா, “லிபிய ராணுவத் தலைவரான லெஃப்டினென்ட் ஜெனரல் முகம்மது அல்-ஹடாடின் மரணம் எனக்குத் தெரிய வந்தது மிகுந்த வருத்தமும் துக்கமும் தருகிறது,” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
ஹடாட், முன்னதாக செவ்வாய்க்கிழமை அங்காராவில் துருக்கிய தற்காப்பு அமைச்சர் யாசர் குலெருடனும் அந்நாட்டின் ஆயுதப் படைத் தலைவர் செல்சுக் பெய்ராக்தரொக்லுடனும் சந்திப்பு நடத்திய பிறகு லிபியா தலைநகர் டிரிப்போலிக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
விழுந்து நொறுங்கிய விமானம் அங்காராவின் எசன்போகா விமான நிலையத்திலிருந்து பிரிட்டிஷ் நேரப்படி மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டதாகவும் 42 நிமிடங்களுக்குப் பிறகு அதன் இருப்பிடம் குறித்த தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் திரு யெர்லிக்காயா ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட விமானம், அங்காராவுக்கு 74 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹேமானாவுக்கு அருகே அவசரமாகத் தரையிறங்கக் குறிப்பு விடுத்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால், அதற்குப் பிறகு விமானத்துடனான தொடர்பை மறுபடியும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
புறப்பட்டு 16 நிமிடங்களுக்குப் பிறகு மின்சாரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விமானம், அவசரமாகத் தரையிறங்கக் குறிப்பு (notification) விடுத்ததாக மூத்த துருக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
விமானம் வானில் வெடித்தபோது எடுக்கப்பட்ட படங்களைப் பல்வேறு துருக்கிய ஊடகங்கள் வெளியிட்டன.

