நியூயார்க்: கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பாரந்தூக்கியின் மேற்பகுதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் ஆறுபேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் மேன்ஹாட்டன் பகுதியில் புதன்கிழமை காலை நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணியாளர்களும் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ, பாரந்தூக்கி இயக்குபவரின் இருக்கை வரை பரவி, அதை முற்றிலும் சேதப்படுத்தியது.
இந்த விபத்து ஹட்சன் யார்ட்ஸ் வளாகத்திற்கு அருகே அமெரிக்க நேரப்படி காலை 7.30 மணியளவில் நடந்தது என நியூயார்க் காவல்துறை ‘எக்ஸ்’ எனப் பெயர் மாற்றம் கண்டுள்ள சமூக ஊடகமான டுவிட்டர் வழியாகத் தெரிவித்தது.
மேலும், அது அவசர உதவி வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததால், அருகிலுள்ள லிங்கன் சுரங்கப்பாதை வழியாக நியூஜெர்சிக்குப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது எனவும் தெரிவித்தது.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில், பாரந்தூக்கியின் மேற்பகுதி தீப்பிடித்திருப்பதையும் அது முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதையும் காணமுடிந்தது. அது உடைந்து விழும்போது, அருகிலிருந்த கட்டடத்தின்மீது மோதி அதையும் சேதப்படுத்தியது.
மேலும், 16 டன் எடைகொண்ட கட்டுமானப் பொருளுடன் அந்தப் பாரந்தூக்கி கீழே விழுந்ததையும் அங்கிருந்து கரும்புகை வெளியேறியதையும் அந்தக் காணொளியில் காணமுடிந்தது.
இந்த விபத்தில் இரண்டுத் தீயணைப்பு வீரர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களுக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.