சிரியாவின் புதிய தலைவர்களைச் சந்திக்கவிருக்கும் அமெரிக்க அதிகாரிகள்

2 mins read
9c171706-9264-47fa-b9bf-abdd0f1f8b0a
சிரியா தலைநகர் டமாஸ்கஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சியின் முன்னணி அரசதந்திரிகள் சிரியாவின் புதிய தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசதந்திரிகள், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்றுள்ளனர். ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (HTS) அமைப்பு வழிநடத்தும் சிரியா அதிகாரிகளை அவர்கள் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இதுவே வா‌ஷிங்டனுக்கும் சிரியாவின் அடுத்த தலைவர்களாகப் பார்க்கப்படுவோருக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி அதிகாரத்துவ சந்திப்பாகும்.

மத்திய கிழக்கு வட்டாரத்துக்கான முன்னணி அரசதந்திரி பார்பரா லீஃப், பிணைக் கைதிகள் விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபர் பிரதிநிதியும் அரசதந்திரியுமான ரோஜர் கார்ஸ்டன்ஸ், மூத்த ஆலோசகராகப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் டேனியல் ரூபின்ஸ்டீன் ஆகியோர் அந்த அரசதந்திரிகள் ஆவர். திரு டேனியல் ரூபின்ஸ்டீன் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் சிரியா தொடர்பு நடவடிக்கைகளை வழிநடத்துவார். அவர்கள்தான், சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அந்நாட்டின் கிளர்ச்சிப் படைகள் கவிழ்த்த பிறகு டமாஸ்கஸ் செல்லும் முதல் அமெரிக்க அரசதந்திரிகள்.

மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள், தலைவர் அகம்மது அல் ஷராவை உள்ளடக்கிய ஹயாத் தாஹ்ரிர் அல் ஷாமுடன் தொடர்புகொள்வதற்கான முயற்சிகளை அதிகம் மேற்கொண்டு வருகின்றன. பயங்கரவாத அமைப்பாக ஹயாத் தஹ்ரீர் அல் ஷாமை மேற்கத்திய அரசாங்கங்கள் வகைப்படுத்தியிருக்கின்றன. அதனை விலக்குவது குறித்துப் பேச மேற்கத்திய நாடுகள் தயாராகி வருகின்றன. பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் சிரியாவின் புதிய தலைவர்களைத் தொடர்புகொண்டதையடுத்து அமெரிக்க அதிகாரிகள் டமாஸ்கசுக்கு செல்கின்றனர்.

சிரியாவின் அரசியல் சூழல் மாறும்போது அனைவரையும் உள்ளடக்குவது, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பு தருவது போன்ற அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்பது வா‌ஷிங்டனின் நிலைப்பாடு. அதுபற்றி அமெரிக்க அதிகாரிகள் ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவர் என அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்