கோலாலம்பூர்: நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துக்காகப் பேய் கன்னியாஸ்திரி போல் ஆடை அணிந்து, முக ஒப்பனை செய்துகொண்டு சென்றார் ஒரு மலேசியப் பெண்.
அவரைக் கண்ட காவல்துறை அதிகாரி ஒருவருக்கு மாரடைப்பே வந்திருக்குமாம்.
தம்மை ‘அவின்’ என்று மட்டும் எக்ஸ் தளத்தில் அடையாளப்படுத்திக்கொண்ட அந்தப் பெண், பிரபல ‘கான்ஜரிங்’ திரைப்படத்தின் ‘வாலாக்’ என்ற கதாபாத்திரமாக ஒப்பனை செய்து தாம் அந்த விருந்துக்குச் சென்றதாக ஜனவரி 22ஆம் தேதி பதிவு ஒன்றில் கூறியிருந்தார்.
விருந்து முடிந்து அவர் வீடு திரும்பும்போது சாலையில் வாகனங்களைக் காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவின் இருந்த வாகனம் நிறுத்தப்பட்டபோது, அங்கிருந்த அதிகாரி பயந்து போனதுடன் மார்பையும் தடவிப் பிடித்துக்கொண்டதாக எக்ஸ் தளத்தில் அவின் தெரிவித்தார்.
“என்னை பயமுறுத்திவிட்டீர்கள். உண்மையிலேயே நீங்கள் பேய் என்று நினைத்தேன்,” என்று அதிகாரி தம்மிடம் கூறியதாக அவின் குறிப்பிட்டார்.
மன்னிப்பு கோரிய அவின் பின்னர் அங்கிருந்து வீட்டுக்குப் போய்விட்டார்.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் அவரது பதிவு இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கார் நிறுத்துமிடத்தில் இருந்த மின்தூக்கியிலும் இரு பெண்கள் அவரைக் கண்டு மிரண்டதாகப் பின்னர் ஒரு பேட்டியில் அவின் கூறினார்.
இரவு விருந்தில் தலைசிறந்த மாறுவேடத்திற்கு நிறுவனம் 500 ரிங்கிட் (S$154) கொடுக்க இருந்ததால் அதைக் குறிவைத்து அவின் இத்தகைய மாறுவேடத்தில் இறங்கினார். ஆனால், அவருக்குப் பரிசு கிடைக்கவில்லையாம்!

