கோலா நெருஸ்: மலேசியாவின் திரெங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரையில் கடலடி ஏவுகணையைப் போல் காட்சியளிக்கும் கருவி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பன்டாய் செபாராங் தாக்கிர் பகுதியில் காணப்பட்ட இக்கருவி, வெடிக்காத ஏவுகணை அல்ல என்று காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 23) உறுதிப்படுத்தினர். ஏவுகணையைப் போன்ற தோற்றம் கொண்ட 2.7 மீட்டர் நீளமுள்ள கருவியைத் தான் கண்டதாக ஞாயிற்றுக்கிழமை காலை 7.20 மணியளவில் பொதுமக்களில் ஒருவர் தங்களுக்குத் தகவல் தந்தார் என்று கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி முகம்மது நூர் தெரிவித்தார்.
“வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 70 கிலோகிராம் எடையுடன் பல மின்கம்பிகளைக் கொண்ட அக்கருவி ஏறத்தாழ ஒரு மில்லியன் ரிங்கிட் (302,206 வெள்ளி) மதிப்புள்ள கடல்துறை ஆய்வுக் கருவி என்பது தெரியவந்தது,” என்று காவல்துறை துணை ஆணையர் முகம்மது நூர் கூறினார்.
கருவியிலிருந்து அபாயகரமான கதிரியக்க அலைகள் வெளிவரவில்லை என்பது சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கருவிக்குச் சொந்தமானவர்களைத் தாங்கள் தேடிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

