டச் ‘என் கோ பிரதிநிதியாக ஆள்மாறாட்டம்: 187,800 ரிங்கிட் இழந்த மாணவி

டச் ‘என் கோ பிரதிநிதியாக ஆள்மாறாட்டம்: 187,800 ரிங்கிட் இழந்த மாணவி

2 mins read
6a496705-f739-4c68-a2aa-242f5a66a8a6
‘டச் என் கோ’ பிரதிநிதியைப் போல ஆள்மாறாட்டம் செய்த சந்தேக ஆடவரிடம் பல்கலைக்கழக மாணவி 187,800 ரிங்கிட்டைப் பறிகொடுத்தார். - படம்: சாவ்பாவ்

கோலா தெரங்கானு: ‘டச் என் கோ’ (Touch’ n Go) பிரதிநிதியைப் போல ஏமாற்றிய நபரிடம் பொதுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 187,800 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

கோலா தெரங்கானு வட்டாரக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸ்லி முகமது நூர் அதுபற்றி இம்மாதம் 4ஆம் தேதி தெரிவித்தார்.

டச் என் கோ செயலியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் பணமோசடியிலும் போதைப் பொருள் கடத்தலிலும் அது பயன்படுத்தப்பட்டதாகவும் 26 வயது மாணவிக்குச் சந்தேக நபரிடமிருந்து அழைப்புவந்தது.

அதையடுத்து விசாரணைக்காகவும் மாணவியின் பெயரைக் குற்றங்களிலிருந்து நீக்குவதற்காகவும் வங்கிக் கணக்கிலிருந்து சில கட்டணங்களை செலுத்தும்படி ஆடவர் மாணவியிடம் கூறினார்.

“பதற்றத்திலும் அச்சத்திலும் இருந்த மாணவி இம்மாதம் 4ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு வெவ்வேறு கணக்குகளுக்கு எட்டு முறை பணத்தை மாற்றினார். அவர் சொந்த சேமிப்புக் கணக்கிலிருந்தும் பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களது கணக்கிலிருந்தும் பணத்தை அனுப்பினார்,” என்று திரு அஸ்லி விளக்கம் அளித்தார்.

மேலும் மூன்று கைச்சங்கிலிகள், ஐந்து மோதிரங்கள், ஒரு சங்கிலி பதக்கம் என தமக்கும் தமது தாய்க்கும் சொந்தமான நகைகளைப் பாந்தாய் பெனாரிக்கில் உள்ள சாலையோரம் சந்தேகத்திற்குரிய பெண்ணிடம் மாணவி கொடுத்ததையும் அவர் குறிப்பிட்டார்.

தாம் ஏமாற்றப்பட்டதைப் பின்னர் உணர்ந்த மாணாவி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) இரவு 9.43 மணிக்குக் காவல்துறையிடம் புகார் அளித்ததாக திரு அஸ்லி சொன்னார்.

நகையைக் கொடுத்த சந்தேகத்திற்குரிய பெண் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவரின் அடையாளம் தெரியவில்லை என்றும் கூடுதல் விவரங்களைத் தர முடியவில்லை என்றும் மாணவி தெரிவித்தார்.

“பொதுமக்கள் இதுபோன்று ஏமாறவேண்டாம். ‘செமாக் மியுல்’ என்ற செயலி மூலம் சந்தேக நபர்கள் வழங்கும் தொலைபேசி எண்களையும் வங்கிக் கணக்கு எண்களையும் சரிபார்க்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்,” என்றார் திரு அஸ்லி.

குறிப்புச் சொற்கள்