சுற்றுலாப் பேருந்துகள் வேக வரம்பு கருவியைப் பொருத்த வேண்டும்: மலேசியா

சுற்றுலாப் பேருந்துகள் வேக வரம்பு கருவியைப் பொருத்த வேண்டும்: மலேசியா

2 mins read
f9b5f07a-4e4e-4de1-a805-2e5208f8919a
மலேசியாவில் சேவையில் உள்ள சுற்றுலாப் பேருந்துகளின் எண்ணிக்கை 3,371ஆக உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் சுற்றுலா மற்றும் விரைவுப் பேருந்துகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் அதன் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கருவி சரியாக வேலை செய்கிறதா என்பதையும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்துவதற்கான முதல் கட்ட பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியாவில் தொடங்கின.

அந்தக் காலகட்டத்தில் சுற்றுலா மற்றும் விரைவுப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இருப்பினும் தற்போதைய நிலவரப்படி மலேசியாவில் சேவையில் உள்ள விரைவுப் பேருந்துகளில் 12 விழுக்காடு பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் சேவையில் உள்ள விரைவுப் பேருந்துகளின் எண்ணிக்கை 2,554ஆக உள்ளது.

அதேபோல் சேவையில் உள்ள சுற்றுலாப் பேருந்துகளில் 49 விழுக்காடு பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மலேசியாவில் சேவையில் உள்ள சுற்றுலாப் பேருந்துகளின் எண்ணிக்கை 3,371ஆக உள்ளது.

இதுகுறித்து மலேசியாவின் சாலைப் போக்குவரத்துப் பிரிவு தலைமை அதிகாரி எடி ஃபாட்லி ரம்லி திங்கட்கிழமை (மார்ச் 16) மாலை செய்தியாளர்களிடம் பேசினார்.

வேகக் கட்டுப்பாடு கருவி தொடர்பான விதிமுறைகள் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஜூலை மாதத்திற்குள் அனைத்துப் பேருந்துகளிலும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள்மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று கூறிய திரு ரம்லி, தனது பிரிவு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்