கொழும்பு: இலங்கையில் படமெடுப்பதற்காக ஓடும் ரயிலிலிருந்து எட்டிப்பார்த்த சீன சுற்றுப்பயணி ஒருவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தனது தலை சுரங்கப்பாதையின் சுவரில் இடித்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் சுற்றுப்பயணி கீழே விழுந்தார்.
இச்சம்பவம் இம்மாதம் ஒன்பதாம் தேதி நிகழ்ந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் உள்ளிட்ட சீன ஊடகங்கள் தெரிவித்தன. பெயர் தெரிவிக்கப்படாத அந்த 35 மாது, நானு ஒயாவிலிருந்து பாடுல்லாவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்ததாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்தன.
அவசர சிகிச்சைக்காக காயமடைந்த மாது ஹப்புட்டாலே வட்டார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு அவர் தனிப்பட்ட பராமரிப்புக்காக வேறு இரு மருத்துவமைனைகளுக்கு மாற்றப்பட்டார்.
அவர் இன்னமும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ரயிலில் பயணம் செய்யும்போது தங்கள் பாதுகாப்பு கருதி கதவுகளுக்கு அருகில் இருப்பதையும் ரயிலிலிருந்து எட்டிப்பார்ப்பதையும் தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள சீனத் தூதரகம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் எச்சரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், இலங்கையில் படமெடுப்பதற்காக ரயிலிலிருந்து எட்டிப்பார்த்த ரஷ்ய சுற்றுப்பயணி ஒருவர் உயிரிழந்தார். ஒல்கா பெர்மினோவா என்ற அந்தப் பெண், பாறை மீது மோதி ரயிலிலிருந்து விழுந்து மோசமான காயங்களுக்கு ஆளானதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

