ஹவானா: மின்சாரத் தடை, ஹோட்டல்கள் மூடல், விமானங்களுக்குப் போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் சேவை ரத்து எனப் பல்வேறு சவால்களை கியூபா எதிர்நோக்கி வருகிறது.
இதனால் அந்த நாட்டைவிட்டு சுற்றுலாப் பயணிகள் வேகமாக வெளியேறி வருகின்றனர். பல நாடுகள் தங்களது குடிமக்களை கியூபாவுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
கியூபாவிற்கான எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா தடுத்து வருகிறது. இதனால் கியூபா ஆட்டம் கண்டுவருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் வெனிசுவேலாவின் எண்ணெய்க் கப்பல்களை கியூபா துறைமுகங்களை நெருங்கவிடாமல் அமெரிக்க ராணுவம் தடுத்து வருகிறது.
கியூபாவுக்கு எண்ணெய் விநியோகம் செய்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மெக்சிகோ உள்ளிட்ட எண்ணெய் ஏற்றுமதி நாடுகளை வாஷிங்டன் மிரட்டியும் வருகிறது.
பெட்ரோலுக்குத் தட்டுப்பாடாக இருப்பதால் கியூபாவில் பல மணிநேர மின்சாரத் தடை நீடிக்கிறது. அதேபோல், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
எரிபொருளை மிச்சம் செய்யும் நோக்கில் கிட்டத்தட்ட 30 ஹோட்டல்கள், உல்லாசத் தளங்கள் தற்காலிகமாக அதன் சேவையை நிறுத்தியுள்ளன.
கியூபாவில் சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் விதமாக ரஷ்யா, கனடா சில விமானங்களை அங்கு அனுப்பியுள்ளது.

