கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அண்மைக் காலத்தில் சுற்றுப்பயணிகள் புதுவிதமான தொந்தரவை எதிர்கொள்கின்றனர்.
கைத்தொலைபேசிகளையும் ஒளிக்கருவிகளையும் சுமந்தபடி அணுகும் புகைப்படக்காரர்கள், படம் எடுத்துத் தருவதாக முதலில் நச்சரிப்பர்.
பின்னர், ‘வாட்ஸ்அப்’ போன்ற சமூக ஊடகங்கள் வழியாக அந்தப் புகைப்படத்தை சுற்றுப்பயணிக்கு அனுப்பி வைப்பர். ஒரு படத்துக்கு 5 ரிங்கிட்($1.50) முதல் 20 ரிங்கிட்($6) வரை தரச்சொல்வர்.
பெரும்பாலான நேரங்களில் சுற்றுப்பயணிகளிடம் ஒரு புகைப்படம் எடுப்பதாகக் கூறிவிட்டு மேலும் பல படங்களை அனுப்பி, கூடுதல் தொகையைத் தரச் சொல்வர்.
சுற்றுப்பயணிகள் படமெடுக்க ஒப்புக்கொள்ளாமல் தாங்களாகவே படம் எடுத்துக்கொள்ள முனைந்தால், வேண்டுமென்றே அவர்களின் பின்னணியில் தலையை நீட்டி அந்தப் புகைப்படத்தைப் பாழாக்க முயல்வர்.
கோலாலம்பூர் நகர மையப் பகுதி போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் இத்தகையோர் தொல்லை தருவதாகக் கூறப்படுகிறது.
முதலில் ஒரு புகைப்படத்துக்கு 10 ரிங்கிட் என்று சொல்லிவிட்டு, பின்னர் ஒளிக்கருவியைப் பயன்படுத்தியதால் 20 ரிங்கிட் தரவேண்டும் என்று புகைப்படக்காரர்கள் கூறியதாகவும் அதேபோல் ஒரு படம் என்று சொல்லிவிட்டு ஐந்து படங்களுக்கு பணம் தரும்படி கட்டாயப்படுத்தியதாகவும் வருகையாளர் ஒருவர் கூறினார்.
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்துக்கு அருகே வாரயிறுதியில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை, இத்தகைய 15 புகைப்படக்காரர்களைக் காணமுடிந்ததாக ‘த ஸ்டார்’ நாளேடு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அனைவருமே மோசமான செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் தங்களுக்கு இது வாழ்வாதாரம் என்பதோடு சுற்றுப்பயணிகளுக்கு அருமையான புகைப்படங்களை எடுத்துத்தர உதவுகிறோம் என்றும் புகைப்படக்காரர்கள் சிலர் குறிப்பிட்டனர்.
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்திற்கு அருகே படமெடுக்க முன்னர் அனுமதிக்கப்பட்டது என்றும் இப்போது அது இயலவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
அந்த வட்டாரத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த துணைக்காவல் படையினர், தொல்லை தரும் புகைப்படக்காரர்கள் குறித்து சுற்றுப்பயணிகளும் உள்ளூர்வாசிகளும் அளித்த புகார்களின் அடிப்படையில் கடந்த மூன்று வாரங்களாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினர்.
இதற்குத் தீர்வு காண்பது தொடர்பில் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக கோலாலம்பூர் நகர மைய நிர்வாகம் கூறியது.

