போர்ட்லேண்ட்: அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றிற்குள் ஆபத்தான நச்சு வேதிப்பொருளை வீசிய 15 வயது மாணவன் மீது உள்நாட்டுப் பயங்கரவாதம், கொலை முயற்சி உட்பட 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி, வடகிழக்கு போர்ட்லேண்டில் உள்ள ‘பென்சன் பாலிடெக்னிக்’ உயர்நிலைப் பள்ளியின் உணவகத்திற்குப் பல நச்சுப்பொருள்களை கொண்டு வந்த அச்சிறுவன், அவற்றை ஒன்றாகக் கலந்து அதிலிருந்து வெளிவந்த வாயுவைச் சுவாசித்துள்ளான். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
சிறுவன் தற்போது மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அவனது வழக்கறிஞர்களில் ஒருவரான நோவா ஹோர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி வளாகத்திலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பரிசோதிக்கப்பட்டதில், குறைந்தது ஏழு பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதாகப் போர்ட்லேண்ட் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அச்சிறுவன் கலந்த ரசாயனப் பொருள்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
அச்சம்பவத்திற்கு முன்பே அச்சிறுவன் வெடிமருந்துகள், வன்முறை மீது ஆர்வம் காட்டும் வகையில் கவலைக்கிடமான நடத்தைகளைக் கொண்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சிறுவன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) நீதிமன்றத்தில் முன்னிலையானபோது, அவனது வழக்கறிஞர்கள் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
அச்சிறுவன் மீது 12 கொலை முயற்சி வழக்குகள், முதல், இரண்டாம் நிலை உள்நாட்டுப் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் உட்பட 19 குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மல்ட்நோமா மாவட்ட அரசு வழக்கறிஞர் நாதன் வாஸ்காஸ், வழக்கை பெரியவர்களுக்கான நீதிமன்றத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார்.
“பள்ளிகளில் நிகழும் வன்முறை அச்சுறுத்தல் அந்தக் கட்டடத்துடன் நின்றுவிடுவதில்லை. அது குடும்பங்களைப் பின்தொடர்ந்து வீட்டிற்கும் வருகிறது, அவர்களின் உணவருந்தும் மேசையிலும் அவர்களுடன் அமர்ந்திருக்கிறது,” என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
