ஐரோப்பா, கனடாவுடன் வர்த்தக உடன்பாடு: துரிதப்படுத்தும் இந்தோனீசியா

2 mins read
9684827f-a602-402e-960a-9c4aacb1a02c
இந்தோனீசியப் பொருள்கள்மீது அமெரிக்கா அறிவித்த 32 விழுக்காட்டு வரியை ஜூலையில்19 விழுக்காட்டுக்குக் குறைத்தது. - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியா அதன் ஏற்றுமதி சந்தையைப் பன்முகப்படுத்தும் நோக்கில் பல்வேறு வர்த்தக உடன்பாடுகளை துரிதமாக உறுதிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் வழி அமெரிக்கா விதிக்கவிருக்கும் வரிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இந்தோனீசியா முனைகிறது.

27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரிகளே இல்லாத வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்ள இந்தோனீசியா முற்படுவதாக அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

யுரே‌ஷிய பொருளியல் ஒன்றியத்துடனும் தனிப்பட்ட ஒப்பந்ததை இந்தோனீசியா செய்ய விரும்புவதாக அந்நாட்டுப்பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சின் ஆக மூத்த அதிகாரி சுசிவிஜொனொ மோகியார்சோ குறிப்பிட்டார். ர‌ஷ்யா, பெலரஸ், கசக்ஸ்தான், கிர்கஸ்தான், அர்மேனியா ஆகியவை யுரே‌ஷிய ஒன்றிய உறுப்பு நாடுகள்.

கூடுதலாக, கடந்த டிசம்பரில் கனடாவுடன் செய்துகொண்ட விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டுக்கான ஒப்புதலை இந்தோனீசியா துரிதபடுத்த முயல்கிறது. “எங்கள் பொருளியல் சந்தைகளை விரிவுபடுத்தும் முயற்சியாக வர்த்தக உடன்பாடுகளை நிறைவேற்ற துரிதமாகச் செயல்படுகிறோம், கடந்த இரண்டு வாரங்களில் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறோம். அதன் மூலம் உறுதியான முடிவுகளைப் பெற்றுள்ளோம்” என்றார் திரு சுசிவிஜொனொ.

புதிய ஒப்பந்தம் ஒன்றின்கீழ் இந்தோனீசியாவிலிருந்து வரும் பெரும்பாலான பொருள்கள்மீது அமெரிக்கா 19 விழுக்காட்டு வரியை விதிக்கும்.

அமெரிக்காவில் உற்பத்தியாகாத நிக்கல், காப்பிக் கொட்டைகள் போன்ற இதர பொருள்களுக்கு அமெரிக்கா குறைவான வரி விதிக்கக்கூடும்.

இந்தோனீசியப் பொருள்கள்மீது டிரம்ப் நிர்வாகம் ஏப்ரலில் முதலில் 32 விழுக்காட்டு வரி விதிக்கப்போவதாகக் கூறியிருந்தது. அது ஜூலை 15ஆம் தேதி 19 விழுக்காட்டுக்குக் குறைக்கப்பட்டது. அமெரிக்காவின் புதிய வரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்பாடு அடுத்த ஆண்டு நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்