தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுடன் வர்த்தக உடன்பாட்டை எட்டக்கூடும்: டிரம்ப்

2 mins read
7f1e1c28-1bc9-40fe-96a0-8c05c4212c6b
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இதற்குமுன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். - படம்: தமிழ் முரசு

வா‌‌ஷிங்டன்: அமெரிக்கா, இந்தியாவுடன் வர்த்தக உடன்பாட்டை எட்டக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். அதன்வழி அமெரிக்க நிறுவனங்களால் இந்தியாவில் கால் பதிக்க முடிவதோடு குறைவான வரிகளை எதிர்கொள்ளக்கூடும்.

அமெரிக்க நிறுவனங்கள் மீதான வர்த்தக வரிகளைக் குறைக்க இந்தியா தயாராக இருப்பதாய் நம்புவதாக ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்தவாறு திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

அது, ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா அறிவித்த 26 விழுக்காட்டு வரியை நிறுத்துவதற்கான வழியமைக்கக்கூடும் என்றார் அவர்.

அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தக உடன்பாட்டை எட்டக்கூடும் என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸண்ட் இதற்குமுன் கூறினார். அந்த உடன்பாட்டின் மூலம் அமெரிக்க இறக்குமதிகள் மீதுள்ள வரிகள் குறைக்கப்படும் என்றும் அடுத்த வாரத்தில் கணிசமாக உயரக்கூடிய அமெரிக்க வரிகளை இந்தியாவால் தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு, “நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்,” என்ற திரு பெஸண்ட் பதிலளித்தார்.

திரு டிரம்ப் நிர்வாகத்துடன் வர்த்தக உடன்பாட்டை எட்ட இந்திய அதிகாரிகள் கடந்த வாரம் திங்கட்கிழமை வா‌ஷிங்டனுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டனர். அவர்கள் இருதரப்பு அக்கறைகள் குறித்து கலந்துரையாடியதாக இந்திய அரசாங்கம் குறிப்பிட்டது.

ஜப்பானுக்கு முன் இந்தியா போன்ற நாடுகளுடன் வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ள டிரம்ப் நிர்வாகம் முற்படுவதாக வெள்ளை மாளிகையுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 9ஆம் தேதி கணிசமாக உயரவுள்ள அமெரிக்க வரிகளைத் தவிர்க்க டிரம்ப் நிர்வாகத்துடன் கலந்துரையாட முற்படும் பல நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

அமெரிக்க வரி விதிப்பு இதற்குமுன் 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது. வரும் ஜூலை 9ஆம் தேதியுடன் அது காலாவதியாகும்போது இந்தியாமீதான பதில் வரி விதிப்பு 27 விழுக்காடு வரை உயரக்கூடும். அது தற்போது 10 விழுக்காடாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்