தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வரிகளால் வர்த்தக வளர்ச்சி பாதிக்கப்படும்: ஏபெக்

2 mins read
31b091ca-0a60-43f1-93d2-6e9cb74f41ba
ஏபெக் அமைப்பின் 21 உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் வருடாந்திர கூட்டத்தை இன்று தொடங்கினர். - கோப்புப் படம்

சியொக்விப்பொ, தென்கொரியா: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிகளால் வட்டாரத்தின் ஏற்றுமதிகள் இவ்வாண்டு ஓரளவுதான் வளர்ச்சி காணும் என்று ஆசிய-பசிபிக் பொருளியல் கூட்டமைப்பு (ஏபெக்) வியாழக்கிழமை (மே 15) தெரிவித்துள்ளது.

ஏபெக் அமைப்பின் 21 உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் வருடாந்திர கூட்டத்தை இன்று தொடங்கினர்.

வட்டாரத்தின் ஏற்றுமதிகள் இவ்வாண்டு 0.4% மட்டுமே வளர்ச்சியடையும் என்று ஏபெக் முன்னுரைத்தது. கடந்த ஆண்டு அது 5.7% அதிகரிக்கும் என்று முன்னுரைத்தது.

அமைப்பு இவ்வாண்டுக்கான அதன் வட்டாரப் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பையும் 3.3 விழுக்காட்டிலிருந்து 2.6 விழுக்காட்டுக்குக் குறைத்துள்ளது.

“வெளிநாட்டுத் தேவைகள், குறிப்பாக உற்பத்தி, பயனீட்டாளர்ப் பொருள்களுக்கான தேவைகள் குறைந்திருப்பதாலும் பொருள்கள் தொடர்பான கட்டுப்பாடுகளில் நிலவும் நிச்சயமற்ற சூழலாலும் ஏபெக் உறுப்பு நாடுகளின் வர்த்தக வளர்ச்சி கணிசமாகக் குறையக்கூடும்,” என்று அமைப்பு அதன் அறிக்கையில் தெரிவித்தது.

ஏபெக் அமைப்பில் உள்ள பாதிக்கும் அதிகமான நாடுகளைக் குறிவைத்து டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. பிணைக்கப்படாத பொருளியல் மாநாடு அமைக்கப்பட்டபோது 1989ஆம் ஆண்டு 17 விழுக்காடாக இருந்த வட்டார சராசரி வரி விகிதம் 2021ஆம் ஆண்டு 5.3 விழுக்காட்டுக்குச் சரிந்தது. அந்தக் காலக்கட்டத்தில் வர்த்தகம் ஒன்பது மடங்குக்கும் மேல் கூடியது.

இன்றிலிருந்து இரண்டு நாள்கள் ஏபெக் உறுப்பு நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதிகள் பன்னாட்டு வர்த்தகம், ஒத்துழைப்பு, அண்மைய சவால்களுக்கு ஏற்ப உலக வர்த்தக அமைப்பில் சீர்த்திருத்தங்களை அறிமுகம் செய்வது போன்ற பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடவிருக்கின்றனர்.

உலக வர்த்தக அமைப்பு ஏற்றுமதிகளில் சீனாவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாகப் பார்க்கும் டிரம்ப் நிர்வாகம், அமைப்புக்கான நிதியை அண்மையில் நிறுத்திவைத்தது.

குறிப்புச் சொற்கள்