கோலாலம்பூர்: ஜோகூரில் உள்ள வடக்குத் தெற்கு விரைவுச்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான பாறை வெடிப்புப் பணிகளை மேற்கொள்ள, தற்காலிகப் போக்குவரத்து மாற்றுவழிகளுக்கு ‘பிளஸ் மலேசியா பெர்ஹாட்’ (பிளஸ்) ஏற்பாடு செய்துள்ளது. அதோடு, சில சாலைத் தடங்களைப் பயன்படுத்தவும் முடியாது.
வரும் மார்ச் 10ஆம் தேதிக்குத் திட்டமிடப்பட்டிருக்கும் அந்தப் போக்குவரத்து மாற்றுவழிகள் இரவு பத்து மணிக்குத் தொடங்கி, மார்ச் 11ஆம் தேதி காலை ஐந்து மணிவரை நீடிக்கும்.
‘வடக்குத் தெற்கு விரைவுச்சாலை கூடுதல் தடக் கட்டுமானத் திட்டத்திற்கு’ இடம் ஒதுக்கவும் பாறை வெடிப்பு ஆயத்தப் பணிகளுக்கு வழிவகுக்கவும் அந்தப் போக்குவரத்து மாற்றங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிளஸ் தெரிவித்தது.
வெடிப்புப் பணிகளின்போது அதிகபட்சப் பாதுகாப்பை உறுதிசெய்ய, கூலாய்க்கும் சினாய்க்கும் இடையிலான பாதை பின்னிரவு 1 மணி அளவில் சில நிமிடங்களுக்கு அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
வெடிப்பு, துப்புரவுப் பணிகளும் பாதுகாப்புச் சோதனைகளும் முடிவுற்றதும், அந்தப் பாதை மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்கூட்டியே பயணங்களைத் திட்டமிடுமாறு வாகனவோட்டிகளுக்கு பிளஸ் ஆலோசனை வழங்கியது. ஆக அண்மைய தகவல்களுக்கு பிளஸ் செயலியைப் பயன்படுத்துமாறும் அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

