மலேசியாவில் போக்குவரத்துக் குற்றங்கள்

விரைவாக அபராதம் செலுத்துவோருக்குக் கூடுதல் தள்ளுபடி: அமைச்சர்

2 mins read
5d4f4acd-668d-4db1-9029-d6cb68a14741
புதிய தள்ளுபடி முறை கடுமையான போக்குவரத்துக் குற்றங்களுக்குப் பொருந்தமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: புளூம்பெர்க்

கோலாலம்பூர்: “அபராதத்தை எந்த அளவுக்கு விரைவாகச் செலுத்துகிறீர்களோ அந்த அளவுக்குத் தொகையும் குறையும்”. போக்குவரத்துக் குற்றம் புரிவோரை அபராதம் செலுத்த ஊக்குவிக்கும் விதமாகப் புதிய அணுகுமுறையைக் கையிலெடுக்கவிருக்கிறது மலேசியா. அடுத்த ஆண்டு (2026) ஜனவரி முதல்தேதியிலிருந்து அது நடப்புக்கு வரும்.

இதற்கு முன்னரும் காவல்துறையும் சாலைப் போக்குவரத்துத் துறையும் தள்ளுபடிகளை வழங்கியுள்ளன. ஆனால் அவை வழங்கிய தள்ளுபடிகள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருந்தன. புதிய முறையின்படி, ஒருவர் எந்த அளவுக்கு விரைவாக அபராதத்தைச் செலுத்துகிறாரோ அந்த அளவுக்குத் தள்ளுபடி விகிதம் கூடுதலாக இருக்கும்.

காவல்துறையும் சாலைப் போக்குரவத்துத் துறையும் வேறு விதமாகச் சட்டத்தைக் கையாள்கின்றன என்ற தவறான கருத்துகளைத் தவிர்ப்பதற்கு அபராதத் தள்ளுபடிகளை நெறிப்படுத்த முடிவுசெய்யப்பட்டது. அமைச்சரவை அதனை இம்மாதம் (அக்டோபர் 2025) ஒப்புக்கொண்டதாகப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார்.

புதிய முறைப்படி, அபராதம் விதிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாளுக்குள் அதனைச் செலுத்துவோருக்கு 50 விழுக்காட்டுத் தள்ளுபடி கொடுக்கப்படும்.

16 நாளிலிருந்து 30 நாளுக்குள் செலுத்துவோருக்குக் கட்டணத்தில் 33 விழுக்காடு கழித்துக்கொள்ளப்படும்.

31 நாளிலிருந்து 60 நாளுக்குள் அபராதத்தில் தள்ளுபடி எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

61 நாளுக்குப் பிறகும் அபராதம் செலுத்தாதோர் நீதிமன்ற நடைமுறைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமைச்சர் சொன்னார்.

கடுமையான போக்குவரத்துக் குற்றங்களுக்குப் புதிய தள்ளுபடி முறை பொருந்தமாட்டாது என்று திரு லோக் தெரிவித்தார். காப்புறுதியின்றி வாகனம் ஓட்டுவது, உரிமமின்றி அல்லது போலியான உரிமத்துடன் வாகனம் ஓட்டுவது முதலியவை அவற்றுள் சில.

50 விழுக்காட்டுக்கும் 70 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட தள்ளுபடி அடுத்த மாதம் (நவம் பர் 2025) முதல்தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை கொடுக்கப்படும் என்றார் திரு லோக்.

2022க்கும் சென்ற மாதத்திற்கும் இடையில் காவல்துறையின் தள்ளுபடிகள், சிறப்பு இயக்கங்களின் காரணமாக மொத்தம் 640 மில்லியன் ரிங்கிட் ($196 மில்லியன்) அபராதம் வசூலிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

நிலுவையில் உள்ள அபராதத் தொகையின் மதிப்பு 6.6 பில்லியன் ரிங்கிட் என்றார் அவர்.

இன்னும் அபராதத்தைச் செலுத்தாதவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உள்துறை அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் பேச்சு நடத்தவிருப்பதாகவும் திரு சைஃபுதீன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்