பேங்காக்: தென் தாய்லாந்தில் உள்ள சரணாலயம் ஒன்றில் யானையைக் குளிப்பாட்டியபோது ‘பீதியடைந்ததால்’ அந்த யானை தூக்கி வீசியதில் ஸ்பானிய சுற்றுப்பயணி ஒருவர் உயிரிழந்ததாகக் காவல்துறை திங்கட்கிழமை (ஜனவரி 6) தெரிவித்தது.
ஃபாங் கா மாநிலத்தில் உள்ள கோ யாவ் யானைப் பராமரிப்பு நிலையத்தில் நடந்த இச்சம்பவத்தில் அந்த 23 வயதுப் பெண் உயிரிழந்ததாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஜரன் பங்பராசெர்ட் கூறினார்.
இதுகுறித்து கேட்டறிய ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தொடர்புகொண்டபோது, சம்பவம் பற்றி மேல்விவரம் வழங்க அந்தச் சரணாலயம் மறுத்துவிட்டது.
காட்டுப்பகுதிகளிலிருந்து கிராமங்களுக்குச் சென்று அங்கு வசிப்போரை யானைகள் மிரட்டுவது வழக்கம் என்றாலும், சரணாலயங்களில் யானைகளுக்கு மதம் பிடிப்பது அரிதே.
தாய்லாந்தில் யானைகளைக் குளிப்பாட்டுவது சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான நடவடிக்கையாகும். சுற்றுப்பயண நோக்கங்களுக்காக அங்கு ஏறத்தாழ 2,800 யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

