தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க தேவாலயத்தில் துயரச் சம்பவம்; மர்ம நபர் சுட்டதில் இரு குழந்தைகள் பலி

2 mins read
d0826437-c917-4c54-84c5-1736047bebf6
குழந்தைகள் பலியான சோகத்தில் கண்ணீர்விட்டுk கதறிய பொதுமக்கள். - படம்: ஏஎஃப்பி

மினியாபொலிஸ்: அமெரிக்காவின் கத்தோலிக்கத் தேவாலயத்தில் புகுந்த மர்ம ஆடவர் ஒருவர் அங்கு சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு குழந்தைகள் உயிரிழந்தன.

பின்னர் அந்தத் தாக்குதல்காரன் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

புதன்கிழமை (ஆகஸ்ட் 27) காலை தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் பள்ளிக் குழந்தைகளும் கலந்துகொண்டனர்.

அப்போது திடீரென்று மூன்று துப்பாக்கிகளுடன் கண்மூடித்தனமாக ஆடவர் சுட்டதில் 8 வயது மற்றும் 10 வயதுடைய இரு குழந்தைகள் அந்த இடத்திலேயே சுருண்டுவிழுந்து மாண்டன.

இதர 17 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

தாக்குதல் நடத்தியவனின் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என்றும் அவனது வயது 23 என்றும் பின்னர் காவல்துறை அடையாளம் கண்டதாக மினியாபொலிஸ் நகரக் காவல்துறைத் தலைவர் பிரியன் ஓ’ஹரா கூறினார்.

தாக்குதலுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

அதேவேளை, அந்த ஆடவர் மன உளைச்சலில் சிக்கித் தத்தளிப்பதையும் இதற்கு முன்னர் கூட்டங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டதையும் காட்டும் காணொளித் தகவல் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அந்தத் தாக்குதல் கத்தோலிக்க மக்களைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்பில் நடத்தப்பட்டதா,  இது உள்ளூர் பயங்கரவாதச் சம்பவமா என்ற கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) தலைவர் காஷ் பட்டேல் கூறினார்.

ஆண்டுதோறும் கல்வி ஆண்டின் முதல் புதன்கிழமையில் அனைத்துப் பள்ளிக்கூடங்களும் இணைந்து நடத்தும் திருப்பலிக் கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த 17 பேரில் 14 பேர் ஆறு வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள். மற்ற மூவரும் 80களின் வயதில் உள்ளவர்கள் என்று திரு ஓ’ஹாரா தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அனைவரும் குணமடைந்து வருவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்