போர்ச்சுகலில் ரயில் விபத்து; பலர் மரணம்

2 mins read
1dc1be36-0fd8-41cc-b974-016d9d38f30b
லிஸ்பன் நகரில் ‘ஃபனிக்கியூலர்’ ரயில் விபத்துக்குள்ளானது. - படம்: ராய்ட்டர்ஸ்

லிஸ்பன்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஃபனிக்கியூலர்’ (funicular) ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என அவசர மருத்துவச் சேவைப் பிரிவுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் 18 பேர் காயமுற்றனர். அந்த ரயில் ஒரு கட்டடத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது.

‘குளோரியா ஃபனிக்கியூலர்’ என்றழைக்கப்படும் அந்த ரயில் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருந்துவரும் ஒன்று. அது, லிஸ்பன் நகரின் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது.

மாண்டோரின் அடையாளம், அவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஐவர் படுகாயமடைந்ததாகப் பேச்சாளர் தெரிவித்தார்.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (செப்டம்பர் 3) மாலை 6.15 மணிக்கு விபத்து நிகழ்ந்தது. லிபர்ட்டி அவென்யூ பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மேடான தண்டவாளப் பகுதியில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ரயில் கட்டடம் ஒன்றின்மீது மோதியததாகச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார். அந்த ரயிலில் சுமார் 40 பேர் பயணம் செய்ய முடியும்.

ரயிலைச் செலுத்தும் கம்பி (cable) வலுவிழந்து போனதால் விபத்து நிகழ்ந்ததாக லிஸ்பன் தீயணைப்பாளர்கள் கூறினர் என்று நியூயார்க் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. விபத்தில் மாண்டவர்களில் ரயிலில் இருந்தவர்கள், அருகிலிருந்த பாதசாரிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை (செப்டம்பர் 4) தேசிய அளவில் இரங்கல் தெரிவிப்பதற்கான துக்க தினமாக போர்ச்சுகல் அரசாங்கம் அறிவித்தது.

சம்பவ இடத்தைக் காவல்துறையினர் சோதனையிட்டனர். விபத்து குறித்த அதிகாரபூர்வ விசாரணை நடத்தப்படும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் கூறியது.

1885ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சம்பந்தப்பட்ட ‘ஃபனிக்கியூலர்’ ரயில் பாதை, லிஸ்பனின் மத்தியப் பகுதியையும் பைரோ அல்டோ (Bairro Alto) பகுதியையும் இணைக்கிறது. பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்பான எல்லா விதிமுறைகளையும் தாங்கள் பின்பற்றிச் செயல்பட்டதாக லிஸ்பன் பொதுப் போக்குவரத்து நிறுவனமான கேரிஸ் சொன்னது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ரயில்விபத்துமரணம்உயிரிழப்பு