கார்மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உட்பட நால்வர் மரணம்

கார்மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உட்பட நால்வர் மரணம்

1 mins read
f40d9fab-8411-4936-bd84-2303737c8e9d
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மேற்கு ஜாவாவில் நின்றிருந்த ரயில்மீது இன்னொரு ரயில் மோதியதில் 16 பேர் உயிரிழந்த நிலையில் (படம்), இன்னொரு ரயில் விபத்து நேர்ந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

செமாராங்: இந்தோனீசியாவில் கார்மீது ரயில் மோதியதில் இரு குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

மத்திய ஜாவாவில் வெள்ளிக்கிழமை (மே 1) இவ்விபத்து நேர்ந்தது.

கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் வந்ததை கார் ஓட்டுநரால் பார்க்க முடியவில்லை எனப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாகக் காவல்துறை அறிக்கை குறிப்பிட்டது.

ரயில் மோதிய காரில் ஒன்பது பேர் இருந்தனர். ரயில் மோதிய வேகத்தில் அந்த கார் கிட்டத்தட்ட 20 மீட்டர் தொலைவிற்குத் தூக்கி வீசப்பட்டது. பின்னர் அது ஒரு கம்பத்தின்மீது மோதி, அருகிலிருந்த நெல்வயலில் உருண்டது.

மாண்டுபோன நால்வரில் இரண்டு மற்றும் பத்து வயது நிரம்பிய இரு சிறுமியரும் அடங்குவர். காரின் ஓட்டுநரும் அதிலிருந்த மற்றப் பயணிகளும் காயமடைந்தனர்.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மேற்கு ஜாவாவில் நின்றிருந்த ரயில்மீது இன்னொரு ரயில் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்; குறைந்தது 90 பேர் காயமுற்றனர்.

அவ்விபத்திற்குப் பாதுகாப்பற்ற ரயில் கடப்புப் பகுதிகளே காரணம் என இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சாடினார். அத்துடன், நாடு முழுவதும் காவல் சாவடிகளை அல்லது மேம்பாலங்களை அமைத்து, அவற்றை மேம்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாரயில்கார்விபத்துஉயிரிழப்பு