மெக்சிகோ சிட்டி: மத்திய மெக்சிகோவில் சரக்கு ரயில் ஒன்று ஈரடுக்கு பேருந்துமீது மோதியதில் 10 பேர் மாண்டனர்.
இந்த விபத்தில் குறைந்தது 61 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான ரயில், கனடியன் பசிபிக் டி டெக்சிகோ ரயில் நிறுவனத்தைச் சேர்ந்தது. விபத்தில் மாண்டவர்களின் குடும்பத்திற்கு அது இரங்கல் தெரிவித்தது.
மேலும் ஓட்டுநர்கள் சாலை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பாக ரயில் தண்டவாளப் பகுதிகளில் உள்ள சாலைச் சந்திப்புகளில் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
விபத்தில் சிக்கிய பேருந்து ஹெராடுரா டி பிளாட்டாவைச் சேர்ந்தது. அது விபத்துகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
விபத்து தொடர்பான படங்களும் வெளியாகியுள்ளன. அதில் பேருந்தின் மேல் பகுதி கடுமையாகச் சேதமடைந்திருந்தது. விபத்து நடந்த பகுதியில் அதிகாரிகள் தடுப்புகள் எழுப்பினர்.
விபத்து தலைநகர் மெக்சிகோ சிட்டியிலிருந்து 150 கிலோமீட்டர் வடமேற்கில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் நேர்ந்தது.
விபத்தில் மாண்டவர்களில் 7 பேர் பெண்கள், மூவர் ஆண்கள்.
தொடர்புடைய செய்திகள்
காயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல் சிலருக்குச் சிறுசிறு காயங்கள் மட்டும் இருந்ததால் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.
மெக்சிகோவில் அடிக்கடி பேருந்து விபத்துகள் ஏற்படுகின்றன. 2023ஆம் ஆண்டு மட்டும் 12,099 பேருந்து விபத்துகள் நேர்ந்தன. அதனால் 128.2 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது. மேலும் 6,400 பேர் காயமடைந்தனர், 1,900 பேர் மாண்டனர்.