ஜப்பானை உலுக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு

ஜப்பானை உலுக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு

2 mins read
86779268-4ad8-4a8f-95ff-161a488d43d6
தோக்கியோவில் உள்ள கோடோ தொகுதியில் முக்கிய நீர்க் குழாய் ஒன்று சேதமடைந்தது. நிலநடுக்கத்தால் அது ஏற்பட்டதா என்று அதிகாரிகள் ஆராய்கின்றனர். - படம்: கியோடோ நியூஸ்
Google News Preferred Icon

தோக்கியோ: ஜப்பானின் கிழக்குப் பகுதியை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதில் தலைநகர் தோக்கியோவரை அதிர்வுகள் உணரப்பட்டன.

இருப்பினும், சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று ஜப்பானின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

இபராக்கி மாநிலத்தில் கிட்டத்தட்ட 68 கிலோமீட்டர் ஆழத்தில் பின்னிரவு 2 மணியளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஒருசில ரயில் சேவைகள் தாமதமாகத் தொடங்கின. வேறு சில ரயில்கள் குறைவான வேகத்தில் செயல்பட்டன என்று ஜேஆர் ஈஸ்ட் நிறுவனமும் பிற ரயில் நிறுவனங்களும் கூறின.

மத்திய தோக்கியோவில் உள்ள உயினோவுக்கும் ‌ஷிபா மாநிலத்தில் உள்ள நரித்தா விமான நிலையத்துக்கும் இடையே சேவை வழங்கும் கெய்செய் ரயில்கள் காலை 9.40 மணியளவில் வழக்கநிலைக்குத் திரும்பின.

தோபு ரயில்வே நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் ஒருசில விரைவுச் சேவைகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டன.

நிலநடுக்கத்தில் பலர் காயமடைந்தனர். அவர்களில் தோக்கியோவிற்கு அருகில் உள்ள இளையர் ஒருவரும் 70 வயதுகளில் உள்ள பெண் ஒருவரும் அடங்குவர்.

தோக்கியோவிற்குத் தெற்கில் உள்ள காவாசாக்கியில் மூன்று பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர்த் தீயணைப்புப் பிரிவுகள் தெரிவித்தன.

குறைந்தது 37 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக ஜப்பானின் தீயணைப்பு, பேரிடர் நிர்வாக அமைப்பு சொன்னதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

தோக்கியோவில் உள்ள கோடோ தொகுதியில் முக்கிய நீர்க் குழாய் ஒன்று சேதமடைந்தது. நிலநடுக்கத்தால் அது ஏற்பட்டதா என்று பெருநகர அதிகாரிகள் ஆராய்கின்றனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பொதுமக்களுக்குக் கூடுதலான தகவல்களை நேரத்திற்கு வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகப் பிரதமர் சானே தாகாய்ச்சி சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

இனிவரும் வாரத்தில், குறிப்பாக அடுத்த இரண்டு, மூன்று நாள்களுக்கு நிலநடுக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஜப்பானிய வானிலை ஆய்வகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்நிலநடுக்கம்காயம்ரயில்பாதிப்பு