பாலியில் குப்பைத் தொல்லை

பாலியில் குப்பைத் தொல்லை

2 mins read
0984f4e7-e88c-4f16-b099-eb898c20f53a
பாலியில் சேரும் குப்பை. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3
Google News Preferred Icon

டென்பசார்: இந்தோனீசியாவின் பாலி தீவில் இருக்கும் ஆகப் பெரிய குப்பை நிரப்பும் பகுதி ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து மூடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் சாலை ஓரங்களில் குப்பை அதிகம் சேர்ந்துள்ளது. அதிக அளவில் குப்பை சேர்வதால் எலித் தொல்லை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்கள் குப்பையை எரிக்கவும் செய்கின்றனர். அதன் காரணமாக எழும் புகை சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

சில வர்த்தகர்கள், தங்கள் கடைகளுக்கு அருகே சேரும் குப்பையை அகற்றத் தாங்களே நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது.

சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் குட்டா கடற்கரைப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இடுப்பளவு உயரத்துக்குக் குப்பை சேர்ந்திருக்கிறது. அங்கு பல எலிகள் காணப்படுவதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

அதிக சுற்றுப்பயணிகள்

பாலியின் மக்கள்தொகை சுமார் 4.4 மில்லியனாகும். அதேவேளை, சென்ற ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் சுற்றுப்பயணிகள் பாலி சென்றனர். மக்கள்தொகையைவிட சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாக இருப்பது அங்கு குப்பை அதிகம் சேர்வதற்கு ஒரு காரணமாகும்.

இந்தோனீசியாவில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்புறங்களில் குப்பையை நிரப்புவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அனால், அந்தத் தடை இப்போதுதான் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய திட்டங்கள்

குப்பையை எரிசக்தியாக மாற்றும் பல திட்டங்களை வரும் ஜூன் மாதம் தொடங்கி வைக்க இந்தோனீசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாலியில் அமையவிருக்கும் அத்தகைய திட்டமும் அவற்றில் அடங்கும்.

எனினும், அத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என்ற கவலையும் நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்