மலேசியாவில் 400,000 பேருக்கு பயணத் தடை

மலேசியாவில் 400,000 பேருக்கு பயணத் தடை

எல்லைகளில் அன்றாடம் 140 வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 1:15 pm

2 mins read

கோலாலம்பூர்: செலுத்தப்படாத வரி, நீதிமன்ற உத்தரவுகள், அமலாக்கத் துறைகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட காரணங்களால் கிட்டத்தட்ட 400,000 மலேசியக் குடிமக்களுக்கு வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிநுழைவுத் துறை திங்கட்கிழமை (நவம்பர் 23) தெரிவித்தது.

கடந்த 2024ஆம் ஆண்டுமுதல் இதுவரை மொத்தம் 404,848 மலேசியர்களுக்குப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வருவாய்க் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறிய குடிநுழைவுத்துறை, தன் நிலுவைத் தொகையை வசூலிப்பதில்லை என்றும் தெரிவித்தது.

பயணத் தடை விதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் நேரடியாகத் தீர்வு கண்ட பிறகு, அந்நிறுவனங்களின் அறிவுறுத்தலின்படி குடிநுழைவுத் துறைத் தடை நீக்கப்படும். பிடியாணை உள்ளவர்கள் உரிய அமலாக்க அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவர். பயணம் மேற்கொள்ளுமுன் அரசாங்கத்தின் குடிநுழைவுப் பயண நிலைச் சரிபார்ப்பு இணையத்தளத்தில் தங்களது நிலையைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மலேசிய எல்லைகளில் அன்றாடம் கிட்டத்தட்ட 140 வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 41,656 வெளிநாட்டவர்க்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

முன்னதாக 2024ல் 34,528 பேருக்கும், 2025ல் 49,522 பேருக்கும் மலேசியாவினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

அவர்களில் இந்தோனீசியர்கள் (34,650) முதலிடத்திலும், பங்ளாதேஷியர் (27,504) இரண்டாமிடத்திலும், இந்தியர்கள் (22,350) மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

தங்குவதற்குப் போதிய நிதி ஆதாரம் இல்லாதது, சந்தேகத்திற்குரிய வருகை நோக்கம், கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருத்தல், செல்லுபடியாகும் கடப்பிதழ் அல்லது உரிய விசா இல்லாமை ஆகியவை அனுமதி மறுக்கப்படுவதற்கான முக்கியக் காரணங்களாகும்.

விசா காலம் முடிந்தும் தங்குதல், சட்டவிரோத வேலைவாய்ப்பு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்குக் குடிநுழைவுத் துறை தற்காலிக அல்லது காலவரையற்ற நுழைவுத்தடை விதித்து, பதிவுகளைப் பராமரித்து வருவதாக குடிநுழைவுத் துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்